திருவள்ளூர் மாவட்டத்தில் குடியரசு தினவிழா

திருவள்ளூர் மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. திருவள்ளூரில் நடந்த விழாவில் கலெக்டர் சுந்தரவல்லி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2018-01-26 23:15 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழாவையொட்டி நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் சமாதான வெண் புறாக்களையும், பலூன்களை பறக்க விட்டார்.

அதை தொடர்ந்து கலெக்டர் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் அவர் மொத்தம் 130 பயனாளிகளுக்கு ரூ.83 லட்சத்து 93 ஆயிரத்து 790 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணித்துறை போன்ற அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும், நினைவு பரிசுகளையும் வழங்கி அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

அதை தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். அப்போது அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் எஸ்.எஸ்.குமார் மற்றும் அனைத்து துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

அதேபோல திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட நீதிபதி டி.இளங்கோவன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். திருவள்ளூரில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையர் செந்தில் குமரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி பின்னர் அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

திருவள்ளூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தமிழ்செல்வன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

ஊத்துக்கோட்டையில் குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட்டில் வக்கீல்கள் சங்க தலைவர் வேல்முருகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கிருபாஉஷா, துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார், போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பரந்தாமன், பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் தன்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்தில் தேசிய கொடியை தாசில்தார் தமிழ்செல்வி ஏற்றி வைத்து அங்கு இருந்தவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பேரூராட்சி அலுவலகத்தில் செயல்அலுவலர் மாலா தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். பள்ளிப்பட்டு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பள்ளிப்பட்டு காந்தி சிலைக்கு முன்னாள் பேரூராட்சி தலைவர் சித்ரா சிவகுமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நகர தலைவர் பாபு நாயுடு, நகர பிரமுகர்கள் வெங்கடரத்தினம், பழனிபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் மீஞ்சூர் ஒன்றிய ஆணையாளர் ராஜேந்திரபாபு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன் இனிப்புகளை வழங்கினார். இந்த விழாவில் ஒன்றிய என்ஜினீயர் நரசிம்மன், நிர்வாக வளர்ச்சி அலுவலர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கொண்டகரை ஊராட்சியில் முன்னாள் தலைவர் மனோகரன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஊராட்சி செயலாளர் முருகன் இனிப்புகளை வழங்கினார். விச்சூர் ஊராட்சியில் அடங்கிய செம்பியம் மணலி கிராமத்தில் கிராமத்தலைவர் வாசு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ஊராட்சி செயலாளர் கிருஷ்டியன் இனிப்புகளை வழங்கினார். சுப்பாரெட்டிபாளையம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் ராஜேஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

நந்தியம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சிசெயலாளர் பாபு தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். பொன்னேரி பேரூராட்சி அலுவலத்தில் செயல்அலுவலர் பாஸ்கர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சுகாதார அலுவலர் அருண்குமார் இனிப்புகளை வழங்கினார். சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையாளர் நர்மதா தேசிய கொடியை ஏற்றி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன் இனிப்புகளை வழங்கினார். இந்த விழாவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏகாம்பரம், ராஜேந்திரன், செல்வராஜ், சுந்தரராஜ், மணிசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்