செய்யூரில் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் மறியல்

கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-26 23:00 GMT
மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் லத்தூர் ஒன்றியத்திற்குட்பட்டது செய்யூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் நேற்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு லத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் உலகநாதன் கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பொதுமக்கள் விலையில்லா ஆடு, மாடுகளை வழங்குவதற்காக பயனாளிகளை தேர்வு செய்ததில் முறைகடு நடந்துள்ளதாகவும், செய்யூர் பகுதியை சுற்றிலும் குப்பை மேடாக உள்ளதாகவும், குடிநீர் தொட்டிகள் சுத்தம் செய்யவில்லை என்பது உள்ளிட்ட பிரச்சினைகளை அதிகாரிகளிடம் கேட்டபோது அதிகாரிகள் உரிய பதில் அளிக்க வில்லை என்று கூறப்படுகிறது.

இதை கண்டித்து பொதுமக்கள் கிராமசபை கூட்டத்தை புறக்கணித்து திடீரென செய்யூர்- மதுராந்தகம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த செய்யூர் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வுகாண்பதாக உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மறியல் காரணமாக செய்யூர்-மதுராந்தகம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்