தஞ்சையில் நடந்த குடியரசு தினவிழாவில் 550 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

தஞ்சையில் நடந்த குடியரசு தினவிழாவில் 550 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்.

Update: 2018-01-26 22:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தினவிழா நேற்று நடைபெற்றது. விழாவில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கலெக்டர் அண்ணாதுரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாருடன் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். பின்னர் அவர்கள், போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து கலெக்டர் அண்ணாதுரை, சுதந்திரபோராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு நேரில் சென்று அவர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்து கவுரவித்தார். தொடர்ந்து அவர், அரசின் பல்வேறு துறை சார்பில் 550 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 3 லட்சத்து 65 ஆயிரத்து 536 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 16 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 100 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலும், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மூளை முடக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட 2 பயனாளிகளுக்கு ரூ.11 ஆயிரத்து 120 மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தொழிலாளர் நலத்துறை சார்பில் 41 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலும், வேளாண்மைத்துறை சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 62 ஆயிரத்து 496 மதிப்பிலும், கூட்டுறவுத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலும், ஊரக வாழ்வாதார மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலும், சமூக நலத்துறை சார்பில் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 14 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 38 ஆயிரத்து 688 மதிப்பிலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 41 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலும், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோக நாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல், பயிற்சி கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், பயிற்சி துணை கலெக்டர் ஸ்ரீதேவி, வேளாண்மைத்துறை துணை இயக்குனர் மதியழகன், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சுபாஷினி, சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஜெயசேகர சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தாமரை மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற அனைவரும் மெட்டல்டிடெக்டர் மூலம் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தஞ்சையில் நடந்த குடியரசு தினவிழாவை கண்டு களிப்பதற்காக அமெரிக்காவை சேர்ந்த 8 பேர் வந்திருந்தனர். இவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப் பட்டது. 

மேலும் செய்திகள்