சேலத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம்

சேலத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. இந்த ஊர்வலத்தில் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Update: 2018-01-25 23:38 GMT
சேலம்,

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்தை, மாவட்ட கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் பள்ளி-கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு வாக்களிப்பதின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும், ஊர்வலத்தின்போது, வாக்காளராக இருப்பதில் பெருமை கொள்வோம், வாக்களிப்போம்..! ஜனநாயகத்தை தழைக்க செய்வோம்...! மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும், வளமான ஜனநாயகத்தை உருவாக்க கட்டாயம் வாக்களிப்போம், வாக்களிப்பது ஜனநாயகத்தின் கடமை, ஓட்டுக்கு பணம் பெறுவது குற்றம், இறந்தவர்களின் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க அனைவரும் முன்வர வேண்டும் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்ற அட்டைகளை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கைகளில் ஏந்தியவாறு சென்றனர். இதையடுத்து திருவள்ளுவர் சிலை வழியாக சென்ற ஊர்வலம் போஸ் மைதானத்தில் நிறைவடைந்தது.

பின்னர், சேலம் நேரு கலையரங்கில் தேசிய வாக்காளர் தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது, கலெக்டர் ரோகிணி தலைமையில் கல்லூரி மாணவ-மாணவிகள், அரசுத்துறை அதிகாரிகள் வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையும், வாக்காளர் தினத்தையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் ரோகிணி பரிசுகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து குழு நடனங்கள், பரதநாட்டியம், தேசிய வாக்காளர் தின பேச்சுப்போட்டி, மற்றும் நாடக நிகழ்ச்சி போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், உதவி கலெக்டர் குமரேஸ்வரன், தேர்தல் பிரிவு தாசில்தார் பிரகாஷ் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்