காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காஞ்சீபுரம்,
பஸ் கண்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசை கண்டித்து காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் டாக்டர் வைத்தியலிங்க ரெட்டியார் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் பொன்.கங்காதரன், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வ.உமாபதி, முன்னாள் எம்.எல்.ஏ. சக்தி கமலம்மாள், மாநில துணை தலைவர் செந்தில்குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் செவிலிமேடு செல்வராஜ் உள்பட பா.ம.க.வினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் மதுராந்தகம் தாலுகா அலுவலகம் முன்பு பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெற்கு மாவட்ட செயலாளர் வா.கோபாலகண்ணன் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் குமரவேல், நிர்வாக குழு உறுப்பினர் குணசேகரன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில உழவர் பேரியக்க துணைத்தலைவர் மணப்பாக்கம் சாந்தமூர்த்தி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சபரி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இதில் மாவட்ட துணை செயலாளர்கள் முருகதாசன், சதாசிவம், சகாதேவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் டாக்டர் வ.பாலா என்கின்ற பாலயோகி தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் நா.வெங்கடேசன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பூபதி, நகர செயலாளர் கண்ணன், வன்னியர் சங்க துணைத்தலைவர் ரஜினி, மாவட்ட துணைத்தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் மணிகண்டன் கலந்து கொண்டு பஸ் கட்டண உயர்வை கண்டித்தும் அதனை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினார். இதில் ஏராளமான பா.ம.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணைத்தலைவர் வினோத் நன்றி கூறினார்.
பஸ் கட்டண உயர்வை கண்டித்து கும்மிடிப்பூண்டி தாலுகா அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணை பொதுச்செயலாளர் எம்.செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் துரை.ஜெயவேலு, மாவட்டத்தலைவர் விஜயகுமார் முதலியார், மாவட்ட பொருளாளர் சுமலதா, ஒன்றியச்செயலாளர்கள் சங்கர், எழில், விஸ்வநாதன், சுரேஷ், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக அரசின் பஸ் கட்டண உயர்வை கண்டித்து மாநில துணை பொதுச்செயலாளர் எம்.செல்வராஜ் கண்டன உரையாற்றினார்.
முன்னதாக நகர செயலாளர் ஜெகன் வரவேற்றார். முடிவில் குருமூர்த்தி நன்றி கூறினார்.