கலப்பட விதைநெல்லால் விளைச்சல் பாதிப்பு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

துறையூர் அருகே கலப்படை விதை நெல்லால் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-01-25 23:00 GMT
துறையூர்,

துறையூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் நெல் விதைத்து 135 நாட்களுக்கு பிறகு நெல் அறுவடை செய்வது வழக்கம்.இதே போல் இந்த ஆண்டும் விவசாயம் செய்வதற்காக சித்திரைப்பட்டி,செங்காட்டுப்பட்டி, கீரம்பூர் உள்ளிட்ட துறையூர் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பலர் விதை நெல் வாங்குவதற்காக துறையூர் ஊராட்சி ஒன்றிய வேளாண் மையத்திற்கு சென்றனர். அப்போது அதிகாரிகள் தற்போது ‘நெல்லூர் பொன்னி 49‘ என்ற புதிய ரக விதை நெல்லை விவசாயிகளுக்கு கொடுத்தனர்.

அதனை வாங்கிய விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் பயிரிட்டனர். புதியரக 49 நெல்வகை நெற்கதிர்களாக இல்லாமல் செம்பட்டை நிறத்துடன் கூடிய வெறும் பதர்களாகவும் ,பருவகால நோய்களை தாக்குபிடிக்க முடியாமல் மஞ்சள்நோய் எனும் பாதிப்பிலும் , நெற்கதிர்கள் கருகியும் சிறியதும் பெரியதுமாக வளர்ந்துள்ளதை பார்த்த விவசாயிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக இது பற்றி விவசாய துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதற்கு நாளடைவில் பயிர்கள் சரியாகி நல்ல விளைச்சலை கொடுக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் பயிர்களில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும் நிலையை கண்டு விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். வேளாண் அதிகாரிகள் மூன்று விதமான கலப்பட விதைநெல்லை தந்ததால் சரியான விளைச்சல் இல்லாமல் காய்ந்து போய் இருப்பதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

பருவமழை பொய்த்து சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் கிடைத்த தண்ணீரை கொண்டும்,வட்டிக்கு கடன்வாங்கியும் நல்ல விளைச்சலை கொடுக்கும் என்று அதிகாரிகள் கொடுத்த நம்பிக்கையில் தங்களது விளை நிலங்களில் பயிர்செய்த விவசாயிகள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.மேலும் அதிகாரிகள் உடனடியாக தங்களது விளை நிலங்களை பார்வையிட்டு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாதிப்படைந்த துறையூர் சுற்று வட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்