பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தி.மு.க. சார்பில் 29-ந்தேதி முதல் சிறை நிரப்பும் போராட்டம் - மு.க.ஸ்டாலின்

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தி.மு.க. சார்பில் 29-ந்தேதி முதல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று கடலூரில் நடந்த வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Update: 2018-01-25 23:00 GMT
கடலூர்,

கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கடலூர் நகர செயலாளர் கே.எஸ்.ராஜா வரவேற்றார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துகிற உரிமை தி.மு.க.வுக்கு உண்டு என்பதை தொடர்ந்து சொல்லி வருகிறேன். நம்முடைய தமிழுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் வீரவணக்கம் செலுத்தி வருகிறோம். தாய் மொழிக்கு வீரவணக்கம் செலுத்துகிற வேளையில் தமிழ்த்தாய்க்கு ஒரு அவமரியாதை நடந்து இருக்கிறது. இதை விரிவாக விளக்க விரும்பவில்லை.

இதை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு வருத்தம் தெரிவிக்காவிட்டால் உரிய நடவடிக்கையில் தி.மு.க. இறங்கும். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது தியானம் செய்ததாக கூறுவது வருந்தத்தக்கது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்க முடியாதவருக்கு நாட்டுப்பண் பாடும் போது தியானம் வரவில்லையா? இப்போது எதற்கெல்லாமோ தியானம் செய்கிறார்கள். ஜெயலலிதா சமாதியில் தியானம் நடந்தது. பதவிக்காக தியானம், பதவி போய் விடக்கூடாது என்பதற்காக தியானம், மீண்டும் பதவியை பெற தியானம் செய்கிறார்கள்.

இந்த தியானம் தான் ஆன்மிக அரசியலா? புரியவில்லை. இது பெரியார், அண்ணா, கருணாநிதி பண்படுத்திய மண். திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொடக்கூட முடியாது. திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயிருக்கிறார்கள். தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்படும் போது அதை தடுத்து நிறுத்திய வரலாறு தி.மு.க.வுக்கு உண்டு.

இந்தியை எதிர்க்கவில்லை. இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். அன்று ஆரம்பித்த போராட்டம் இன்னும் நீருபூத்த நெருப்பாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. இன்னும் முடிந்து விட வில்லை. கடந்த 1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்புக்காக போராட்டம் தீவிரமடைந்து தலைவர்கள், கழக முன்னோடிகள் கைது செய்யப்பட்டார்கள். அப்போது மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்தார்கள். அந்த போராட்டம் ஆட்சி மாற்றத்துக்கு காரணமாக இருந்தது.

அண்ணா முதல்-அமைச்சராகி போட்ட முதல் கையெழுத்து தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்ற பெயரை சூட்டி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இரு மொழி கொள்கை 23.1.1968 அன்று நிறைவேற்றப்பட்டது. இன்றோடு 50 ஆண்டுகள் ஆகிறது. பொன் விழா கொண்டாடுகிற வேளையில் இந்த கூட்டத்தை நடத்துகிறோம்.

மத்தியில் ஆட்சி நடத்துகிற பாரதீய ஜனதா அரசு, தமிழ்நாட்டில் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கிற சதி வலையில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த 4 ஆண்டு கால பாரதீய ஜனதா ஆட்சியில் பல்வேறு சதி வேலையில் ஈடுபட்டுள்ளது. ஆசிரியர் தினத்தை குரு உற்சவம் என மாற்றி உள்ளது. சமஸ்கிருத வாரம், புதிய கல்வி கொள்கை, இந்தி பேசாத மாநிலங்களில் 10-ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம், ஏன் தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலை மைல் கல்லில் கூட இந்தியை கொண்டு வந்துள்ளது. ஆங்கிலம் நீக்கப்பட்டு உள்ளது. இப்படி இந்தியை திணிக்க பல்வேறு சதி வலையை பின்னும் வேலையில் ஈடுபட்டுள்ளது. ஆகவே 1965-ம் ஆண்டில் தமிழ் மொழிக்காக நடந்த போராட்ட களம் மீண்டும் உருவாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கூறியபோது, அதை கருணாநிதி உயர்த்தவில்லை. ஆனால் இந்த அரசு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி வருகிற 27-ந்தேதி (நாளை) தி.மு.க. போராட்டம் நடத்துகிறது. இந்த போராட்டத்துக்கு தோழமை கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. ஆனால் பாரதீய ஜனதா கட்சியும் போராட்டம் நடத்துகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் இவர்கள், மாநில ஆட்சியை கேள்வி கேட்டு போராட்டம் நடத்துவது வேடிக்கை. பஸ் கட்டண உயர்வு குறித்து நான் எழுதிய கடிதத்துக்கு முதல்-அமைச்சர் இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை. 27-ந்தேதி நடக்கும் போராட்டத்துக்கு பிறகும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால் வருகிற 29-ந்தேதி முதல் அனுமதிக்காத இடங்களிலும் தி.மு.க.வினர் மறியல் செய்வார்கள். சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவார்கள். இதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் 1400 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. இதை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சரான எம்.சி.சம்பத்தும் இதை கண்டு கொள்ளவில்லை. தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு நிலக்கரி வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது. ரூ.12 ஆயிரத்து 280 கோடிக்கு தரமற்ற நிலக்கரி வாங்கி உள்ளார்கள். அதில் ரூ.1,730 கோடி முதல் ரூ.3,035 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இதற்கு முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கரூர் அன்புநாதன் மற்றும் உயர் அதிகாரிகளும் காரணம். இதற்கு சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள். கருணாநிதி நலமுடன் இருந்தால் இந்த ஆட்சியை விட்டு வைத்திருப்பாரா? என்று கேட்கிறார்கள். கருணாநிதி ஜனநாயகவாதி, அவர் எந்த ஆட்சியையும் கலைத்ததாக வரலாறு இல்லை. அவருடைய ஆட்சி தான் 2 முறை கலைந்து இருக்கிறது. தி.மு.க. கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்க விரும்பவில்லை. மக்களை சந்தித்து ஜனநாயக முறையில் தான் ஆட்சியை பிடிப்போம். குட்கா விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. இந்த விசாரணை முடிந்ததும் அமைச்சர், டி.ஜி.பி. சிறைக்கு செல்வார்கள். இந்த ஆட்சி விரைவில் கவிழும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

மேலும் செய்திகள்