பஸ் கட்டண உயர்வை கண்டித்து தொழிற்சங்கத்தினர் சாலை மறியல்; 723 பேர் கைது

பஸ் கட்டண உயர்வை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 723 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-01-25 22:30 GMT
கடலூர்,

பஸ்கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் கடலூர் மாவட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் பஸ்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் செய்யப்போவதாக அறிவித்தனர். அதன்படி நேற்று மாவட்டத்தின் தலைநகரான கடலூர் உழவர் சந்தை முன்பு சி.ஐ.டி.யு. மாநில துணை தலைவர் பொன்முடி தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் திரண்டு நின்றனர். பின்னர் அவர்கள் தொழிற்சங்க கொடிகளை கையில் பிடித்து கோஷம் எழுப்பியபடி அங்கிருந்து பேரணியாக புறப்பட்டனர். அண்ணாபாலம், கம்மியம்பேட்டை இணைப்பு சாலை சந்திப்பு அருகே வந்தபோது அங்கே பாதுகாப்புக்கு நின்றபோலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து தொழிற்சங்கத்தினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர். இதனால் கடலூர்-புதுச்சேரி இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது அங்கே பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு. மாநில துணை தலைவர் பொன்முடி, தொ.மு.ச. மண்டல தலைவர் பழனிவேல், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் மாரியப்பன், துணை செயலாளர் குளோப், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பாஸ்கரன், செயலாளர் கருப்பையன், ஏ.ஐ.யு.டி யு.சி. மாவட்ட குழு உறுப்பினர் பாபு, நகர செயலாளா அரிகிருஷ்ணன் மற்றும் தொழிலாளர்கள் உள்பட 260 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அதேபோல் சிதம்பரத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட குழு உறுப்பினர் முத்து தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 110 பேர், விருத்தாசலம் தலைமை தபால் நிலையம் அருகில் மாவட்ட துணை செயலாளர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேர், பண்ருட்டியில் சுற்றுலா மாளிகை முன்பு மாவட்ட குழு உறுப்பினர் பழனிவேல் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 133 பேர், வடலூர் குறுக்குசாலையில் மாவட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

அனைத்து மத்திய தொழிற்சங்கத்தினர் நேற்று மெயின் பஜாரில் ஒன்று திரண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக 19-வது வட்டத்தில் உள்ள தபால் நிலையம் முன்பு வந்தனர். அங்கு அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட தொ.மு.ச. தலைவர் வீர.ராமச்சந்திரன், பொதுச்செயலாளர் சுகுமார், சி.ஐ.டி.யு. சங்க தலைவர் வேல்முருகன், பொருளாளர் குருநாதன், பாரி உள்பட 78 பேரை கைது செய்தனர். பின்னர் அனைவரும் அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

பெண்ணாடத்தில் ஜீவா சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் நகர தலைவர் செந்தில்முருகன் தலைமையில் சுமைதாங்கியில் இருந்து பஸ் நிலையம் வரை ஊர்வலம் நடந்தது. பின்னர் அவர்கள் பழைய பஸ் நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் அண்ணா சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து சங்க செயலாளர் அம்பேத்கர் தலைமையில் பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் மறியல் போராட்டம் செய்தனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 2 சங்கங்களை சேர்ந்த 62 பேரை பெண்ணாடம் போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 

மேலும் செய்திகள்