களக்காடு அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி 2–வது நாளாக கிராம மக்கள் முற்றுகை

களக்காடு அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி 2–வது நாளாக கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-25 21:00 GMT
களக்காடு,

களக்காடு அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி 2–வது நாளாக கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழவடகரையில் இருந்து பத்மநேரி செல்லும் மங்கம்மாள் சாலையில் நேற்று முன்தினம் மாலையில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அந்த டாஸ்மாக் கடையை மூடக் கோரி கீழவடகரை, வீ.கே.நகர், கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு கடையை முற்றுகையிட்டனர். அவர்களிடம் களக்காடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில் நேற்று 2–வது நாளாக பொதுமக்கள் திரண்டு அந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார், நாங்குநேரி தாலுகா செயலாளர் முருகன் உள்பட 150–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை


இதுகுறித்து தகவல் அறிந்த களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்