பாளையங்கோட்டையில் நடந்த தொழிலாளி கொலை வழக்கில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர் கைது
பாளையங்கோட்டையில் நடந்த தொழிலாளி கொலையில் வழக்கில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நண்பரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் ஒருவர் நாங்குநேரி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
நெல்லை,
பாளையங்கோட்டையில் நடந்த தொழிலாளி கொலையில் வழக்கில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நண்பரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலும் ஒருவர் நாங்குநேரி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
தொழிலாளி கொலைபாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரை சேர்ந்தவர் விக்டர். இவருடைய ஒர்க்ஷாப்பில் அவருடைய நண்பர்கள் ராஜீவ்காந்தி, ராஜாசிங்டேவிட், தொழிலாளியான ஆனந்தராஜ் உள்ளிட்டோர் சேர்ந்து கடந்த 21–ந் தேதி மது குடித்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மதுபோதையில் ஆனந்தராஜ் நண்பர்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள், ஆனந்தராஜை காரில் கடத்தி மேலகுளம் காட்டுப்பகுதியில் வைத்து அடித்துக் கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை சீவலப்பேரி ஆற்றில் வீசினர். அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜாசிங் டேவிட்டுக்கும் அரிவாளால் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
7 பேர் கைதுஇதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்கு தொடர்பாக மேலஇலந்தகுளத்தை சேர்ந்த மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீஸ்காரர் மகராஜன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் மேலஇலந்தகுளத்தை சேர்ந்த மற்றொரு மகராஜனை (24) போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் நாங்குநேரி கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து மகராஜனை போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட ஆனந்தராஜ் நண்பர் ராஜாசிங் டேவிட் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த கொலை வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் அவரையும் கைது செய்தனர்.