பஸ் கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து நெல்லை-தூத்துக்குடியில் கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரம்பள்ளத்தில் மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-01-24 22:45 GMT
நெல்லை,

தமிழக அரசு பஸ்களில் கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதை கண்டித்து தினமும் பல்வேறு கட்சியினர், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நெல்லை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இவர்களின் போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது.

சேரன்மாதேவி மனோ கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பஸ் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும். சுயநிதி கல்லூரி மற்றும் மனோ கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த முப்பிடாதி, கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் திருமலை நம்பி உள்பட அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இதேபோல் சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும், இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் உச்சிமகாளி தலைமையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து பள்ளிக்கூடம் முன்பு சாலை மறியல் செய்ய முயற்சி செய்தனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் மாணவர்களை தடுத்து நிறுத்தி கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் நேற்று காலை மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். கல்லூரி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க துணை செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதே போன்று தூத்துக்குடி அருகே உள்ள மறவன்மடத்தில் உள்ள பிஷ்ப் கால்டுவெல் கல்லூரி மாணவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் தூத்துக்குடி-நெல்லை சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மாணவர்களை அப்புறப்படுத்தினர். நாகலாபுரம் மனோ கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எட்டயபுரம் அருகே உள்ள கீழ ஈரால் தொன் போஸ்கோ கலை-அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் நேற்று மதியம் 3 மணி அளவில் வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து, கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைப்பாளர் சங்கரலிங்கம், மாவட்ட குழு உறுப்பினர் சத்தியநாதன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்