பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் முதல்-அமைச்சரின் வீட்டின் முன்பு உண்ணாவிரதம் இருப்போம்

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் சேலத்தில் உள்ள முதல்-அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டு உண்ணாவிரதம் இருப்போம் என்று தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநில தலைவி ஜான்சிராணி கூறினார்.

Update: 2018-01-24 23:00 GMT
சேலம்,

சேலம் முள்ளுவாடி கேட் அருகே உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நேற்று மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநில மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் சாரதாதேவி தலைமை தாங்கினார். இணை செயலாளர்கள் ஷாகிராபானு, தேன்மொழி, மாவட்ட தலைவிகள் அங்கம்மாள், ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநில தலைவி ஜான்சிராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், உள்ளாட்சி தேர்தலில் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் அதிகளவில் போட்டியிடுவது குறித்தும் பேசினார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்கள் ஜெயபிரகாஷ், முருகன், மாவட்ட பொதுச்செயலாளர் பச்சப்பட்டி பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பேட்டி

கூட்டத்திற்கு பின்பு தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநில தலைவி ஜான்சிராணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மகளிர் காங்கிரசை வலுப்படுத்தவும், உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீதம் இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் அதிகளவில் போட்டியிடுவது குறித்தும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன்.

உண்ணாவிரதம்

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் அரசானது, மக்களுக்காக எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஆட்சியாளர்களின் சுயநலத்திற்காக அரசை தவறாக வழிநடத்துகிறார்கள். பஸ் கட்டண உயர்வால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பஸ் கட்டண உயர்வை அரசு உடனே திரும்ப பெறவேண்டும். அப்படி திரும்ப பெறாவிட்டால் 29-ந் தேதி எனது சுற்றுப்பயணம் முடிந்தவுடன் சேலத்தில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டை முற்றுகையிட்டு உண்ணாவிரதம் இருப்போம்.

தமிழகத்தில் இருந்து புதுடெல்லிக்கு உயர்கல்வி படிக்க செல்லும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்து வருகிறது. மாணவர் சரவணனை தொடர்ந்து தற்போது சரத்பிரபு என்பவரும் உயிரிழந்துள்ளார். அவரது மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். மேலும், உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். அந்த திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் முறையாக வழங்கவில்லை. எனவே, 100 நாள் வேலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு ஜான்சிராணி கூறினார். 

மேலும் செய்திகள்