90 சதவீத அ.தி.மு.க. தொண்டர்கள் டி.டி.வி.தினகரனுடன் இருக்கிறார்கள் தங்கதமிழ்செல்வன் பேச்சு

90 சதவீத அ.தி.மு.க. தொண்டர்கள் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. உடன் தான் இருக்கிறார்கள் என்று கூடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தங்கதமிழ்செல்வன் பேசினார்.

Update: 2018-01-24 23:00 GMT
தேனி

கூடலூரில் டி.டி.வி.தினகரன் அணி சார்பில், மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் 101–வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். மருத்துவஅணி செயலாளர் டாக்டர் கதிர்காமு, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஸ்டார்ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கைபரப்பு செயலாளரும், மாவட்ட செயலாளருமான தங்கதமிழ்செல்வன், கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

 ஜெயலலிதா இறந்த பின்பு, ஓ.பன்னீர்செல்வத்தை முதல்–அமைச்சராக தேர்வு செய்தோம். கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி வைத்தோம். இந்த நிலையில் கட்சியில் இருக்கும் சில அமைச்சர்கள் ஒன்று சேர்ந்து பொதுச்செயலாளராக இருக்கும் சசிகலா தான் முதல்–அமைச்சராக வரவேண்டும் என்று ஜெயலலிதா சமாதியில் தீர்மானம் போட்டனர். அப்போது முதல்–அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். அதன் பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலாவை முதல்–அமைச்சராக தேர்வு செய்து கவர்னரிடம் கடிதம் அளித்தோம். ஆனால் கவர்னர் ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. ஏற்கனவே மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா மீது சுப்ரீம் கோர்ட்டில் உள்ள வழக்கின் தீர்ப்பு சில நாட்களில் வரக்கூடும் என்று அதற்காக தாமதம் என்று கூறி வந்தார்கள். இதில் தீர்ப்பு எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது. தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக தான் வரும் என்று எப்படி முடிவு செய்தார்கள். இதில் இருந்து மத்திய அரசின் செயல்பாடு எவ்வளவு கீழ்த்தரமாக உள்ளது என்று பொதுமக்கள் நன்றாக தெரிந்து கொண்டனர்.

அதன் பிறகு பா.ஜ.கவினர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை ஒன்றாக இணைத்து வைத்தனர். பின்னர் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவித்து, கட்சியின் சின்னமான இரட்டை இலையையும் வழங்கினர். ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த முறை டி.டி.வி.தினகரனுக்கு வழங்கிய தொப்பி சின்னத்தை கேட்டோம் தர மறுத்துவிட்டனர்.

 ஆனால் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பிர‌ஷர் குக்கர் சின்னத்தில் நின்று அமோக வெற்றி பெற்றார். ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக தான் அமைச்சர்கள் மற்றும் சில நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கிறார்கள். 90 சதவீத அ.தி.மு.க. தொண்டர்கள் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. உடன் தான் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் பஸ் கட்டணத்தை உயர்த்தி விட்டனர். காரணம் கேட்டால், அரசு நிதிப்பற்றாக்குறையால் தவிக்கிறது. கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. படுதோல்வி அடையும். 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் அடுத்த மாதம் (பிப்ரவரி) முதல் வாரத்தில் தீர்ப்பு வரும். அதில் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதன் பிறகு அ.தி.மு.க. ஆட்சி டி.டி.வி.தினகரன் தலைமையில் தொடர்ந்து செயல்படும்.

இவ்வாறு தங்கதமிழ்ச்செல்வன் பேசினார்.

மேலும் செய்திகள்