வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு ரூ.10¾ கோடி நிவாரணத்தொகை

திருப்பூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு ரூ.10¾ கோடி நிவாரணத்தொகை வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2018-01-24 21:45 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2016-17-ம் ஆண்டில் ஏற்பட்ட கடும் வறட்சியினால் பெரும்பாலான பயிர் காய்ந்து விவசாயிகள் கடும் இழப்புக்கு உள்ளாகினார்கள். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொகையாக ரூ.83 கோடிக்கு மேல் அரசினால் விடுவிக்கப்பட்டது. இதில் தென்னை மரங்கள் பாதித்த உடுமலை, மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் வட்டாரங்களில் உள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் முழுமையாக கிடைக்கவில்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

இதன்பேரில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் சிறப்பு கண்காணிப்புக்குழு அமைத்து கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் கணக்கெடுப்பு பணிகள் முடிந்து உரிய மேல் அலுவலர்களின் ஆய்வுக்கு பின்பு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. கலெக்டரின் பரிந்துரையின் பேரில் அரசிடம் இருந்து, தென்னை பாதித்த வறட்சி இடுபொருள் நிவாரணத்தொகை கிடைக்காத விவசாயிகளுக்கு தாலுகா வாரியாக இழப்பீட்டுத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருப்பூர் தெற்கு தாலுகாவில் 284 விவசாயிகளுக்கும், பல்லடத்தில் 71 பேருக்கும், ஊத்துக்குளியில் 19 பேருக்கும், அவினாசியில் 43 பேருக்கும், தாராபுரத்தில் 647 பேருக்கும், காங்கேயத்தில் 32 பேருக்கும், உடுமலையில் 4 ஆயிரத்து 602 பேருக்கும், மடத்துக்குளத்தில் 361 பேருக்கும் என மொத்தம் 6 ஆயிரத்து 59 விவசாயிகளுக்கு 5 ஆயிரத்து 986 எக்டர் பரப்பளவுக்கு ரூ.10 கோடியே 77 லட்சத்து 52 ஆயிரத்து 446 மதிப்பில் நிவாரணத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த வறட்சி இடுபொருள் நிவாரணத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் விரைவில் வரவு வைக்கப்பட உள்ளது என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்