கொலை தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்ற பெண்ணை விடுவிக்க கோரி உறவினர்கள் மறியல்

தடிக்காரன்கோணம் அருகே பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்ற பெண்ணை விடுவிக்க கோரி கணவர், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-24 23:00 GMT
அழகியபாண்டியபுரம்,

தடிக்காரன்கோணம் அருகே சி.எம்.எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் இளையபெருமாள், ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. அவருடைய மனைவி லலிதா (வயது 35). கடந்த 5-ந் தேதி அதிகாலையில் இளையபெருமாள் வேலைக்கு சென்றார். பின்னர், வீட்டில் தனியாக இருந்த லலிதா சமையல் அறையில் தேங்காய் துருவியால் அடித்து கொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்தன.

இந்த கொலை தொடர்பாக கீரிப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை நடந்து 2 வாரங்கள் கடந்தும் கொலையாளி யார்? என துப்பு துலங்கவில்லை. இதையடுத்து கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் மதியம் தனிப்படை போலீசார் சி.எம்.எஸ். நகரை சேர்ந்த ஒரு பெண்ணை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவரை தக்கலையில் உள்ள போலீஸ் உதவி சூப்பிரண்டு அலுவலகத்துக்கு கொண்டு சென்றதாக தெரிகிறது. அவர் மாலையில் விடுவிக்கப்படுவார் என உறவினர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால், நேற்று காலை வரை அந்த பெண்ணை விடுவிக்கவில்லை.

இதையடுத்து நேற்று காலை 8.30 மணியளவில் பெண்ணின் கணவரும், உறவினர்களும் தடிக்காரன்கோணம் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பெண்ணை உடனே விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அத்துடன், இந்த வழக்கு விசாரணையை துரிதப்படுத்த கோரி தடிக்காரன்கோணம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஜெயராம், ராயப்பன், அ.தி.மு.க. பிரமுகர் ரெமணி உள்பட ஏராளமான பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கீரிப்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதில் உடன்பாடு எதுவும் ஏற்பட வில்லை. இதையடுத்து நாகர்கோவிலில் இருந்து அதிரடிபடை போலீசார் வரவழைக்கப்பட்டனர். மேலும், தக்கலை போலீஸ் உதவி சூப்பிரண்டு ஸ்ரீ அவிநேவ் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அத்துடன் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பெண் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக தாஸ், ராபின்சன் உள்பட 21 பேர் மீது கீரிப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்