பட்டு நூல் விலை உயர்வை கண்டித்து சத்தியில் கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

பட்டு நூல் விலை உயர்வை கண்டித்து சத்தியமங்கலத்தில் கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-01-24 22:30 GMT
சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் கைத்தறி சேலை உற்பத்தியாளர்கள் மற்றும் அதனை சார்ந்த தொழில் செய்பவர்கள் சங்கம் சார்பில் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை வாரச்சந்தை அருகே ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.எஸ்.பழனிச்சாமி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், சைனா பாவு, கோரா பாவு, பட்டு பாவு, பட்டு ஊடை, ஜரிகை ஆகியவை கிடைக்காத காரணத்தினால் கைத்தறி நெசவாளர்களும், அதனை சார்ந்த தொழில் செய்யும் லட்சக்கணக்கானோரும் வேலை இழந்துள்ளார்கள். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே பட்டு நூல் விலை உயர்வை குறைக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. செயலாளர் ரங்கராஜன், ஒருங்கிணைப்பாளர் சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசே பட்டு நூல் வரியை குறைக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள். இதில் சத்தியமங்கலம், டி.ஜி.புதூர், தொட்டம்பாளையம், தொப்பம்பாளையம், புஞ்சைபுளியம்பட்டி, சதுமுகை, கெம்மநாயக்கன்பாளையம், அரசூர், வாகராயம்பாளையம், அந்தியூர், கணக்கம்பாளையம் உள்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான கைத்தறி நெசவாளர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்