விளை நிலங்களை சேதப்படுத்திய யானைகள் விவசாயிகள் அதிர்ச்சி

குடியாத்தம் அருகே யானைகள் கூட்டம் விளைநிலங்களை சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2018-01-23 22:45 GMT
குடியாத்தம்,

குடியாத்தம் வனச்சரகம் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது. குடியாத்தம் வனச்சரகத்தையொட்டி ஆந்திர மாநில வனப்பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் உள்ளது.

கடந்த ஓராண்டுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 15 யானைகள் குடியாத்தம் வனப்பகுதியில் முகாமிட்டு தொடர்ந்து விளைநிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வந்தது. கடந்த சில மாதங்களாக யானைகள் தொல்லை இல்லாமல் இருந்து வந்தது.

கடந்த ஒரு வாரமாக ஒற்றை யானை தனகொண்டபல்லி, கொட்டமிட்டா உள்ளிட்ட பகுதிகளில் பயிர்களை சேதம் செய்து வந்தது. அதனை வனத்துறையினர் விரட்டி வந்தனர்.

விளைநிலங்கள் சேதம்

இந்த நிலையில் தற்போது ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து குட்டி யானை உள்பட 9 யானைகள் கொண்ட கூட்டம் மீண்டும் தமிழக எல்லையில் உள்ள குடியாத்தம் வனப்பகுதிக்குள் நுழைந்தது.

நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் அருகே ஆம்பூரான்பட்டி அருகே உள்ள மாந்தோப்பு, சப்போட்டா தோப்பிற்குள் புகுந்த யானை கூட்டம் மரங்களை சேதப்படுத்தியது. தொடர்ந்து வனப்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள விவசாயிகளின் விளைநிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் வனச்சரக அலுவலர் குமார், வனவர் கணேசன் உள்ளிட்ட வனத் துறையினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

குடியாத்தம் அருகே தனகொண்டபல்லி, கொட்டமிட்டா, சைனகுண்டா, மோர்தானா உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மாந்தோப்புகள் உள்ளன. கடந்த ஆண்டு இந்த மாந்தோப்புகளில் மாங்காய் விளைச்சலின்போது யானைகள் கூட்டம் மாந்தோப்புக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இன்னும் ஒரு சில மாதங்களில் மாங்காய் சீசன் வர உள்ளதால் அதற்குள் யானை கூட்டத்தை ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவாசயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்