ஆற்றில் தொடர்ச்சியாக சாயக்கழிவு நீர் கலக்கும் அவலம் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

நொய்யல் ஆற்றில் தொடர்ச்சியாக சாயக்கழிவுநீர் கலக்கப்படுவதால் நிலத்தடிநீர் மாசுபடும் அவலம் உள்ளது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Update: 2018-01-23 22:45 GMT
நல்லூர்,

திருப்பூரை அடுத்த நல்லூர், காசிபாளையம் அருகே சிட்கோ செல்லும் சாலையையொட்டி நொய்யல் ஆறு செல்கிறது. இங்கு தடுப்பணை ஒன்று உள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து மதகு வழியாக நொய்யல் ஆற்று நீர் செல்கிறது. இந்த நொய்யல் ஆற்றில் அடிக்கடி சாயக்கழிவுநீர் கலந்து செல்கிறது. இதன் காரணமாக நிலத்தடி நீர் மாசு அடைகிறது. நொய்யல் ஆற்றின் சுற்றுப்பகுதிகளில் உள்ள சாய ஆலைகளில் இருந்து இந்த ஆற்றில் சாயக்கழிவுநீர் கலக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினருக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதற்கிடையில் கடந்த 14-ந் தேதி நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுநீர் கலந்து சென்றது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மீண்டும் சாயக்கழிவுநீர்

அனைத்து சுத்திகரிப்பு மைய பிரதிநிதிகள் தாங்கள் இந்த தவறை செய்யவில்லை என்று மறுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நொய்யல் ஆற்றில் நேற்றும் சாயக்கழிவுநீர் நுரையுடன் வந்தது. 3 அடி உயரத்தில் உள்ள தடுப்பணை மதகில் இருந்து தண்ணீர் விழுவதால் நுரை ஏற்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து ஆற்றில் சாயக்கழிவுநீர் கலந்து வருவதால் நிலத்தடி நீர் மாசு அடைவதுடன் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து சாயக்கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த சாயக்கழிவுநீர் சாய ஆலைகளில் இருந்து விடப்படுகிறதா? அல்லது வேறு எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மனசு வைத்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதை தடுக்க முடியும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்