தென்னை மரங்களில் ‘கள்’ இறக்க கட்டியிருந்த பானைகளை உடைத்த போலீசார்

பொங்கலூர் பகுதியில் தென்னை மரங்களில் ‘கள்’ இறக்க கட்டியிருந்த பானைகளை போலீசார் உடைத்தனர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Update: 2018-01-22 23:00 GMT
பொங்கலூர்,

‘கள்’ இறக்கி விற்பனை செய்ய அரசு அனுமதி தரவேண்டும் என்று கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி பொங்கலூர் அருகே வாவிபாளையம் மற்றும் குள்ளம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் சில தோட்டங்களில் உள்ள தென்னையில் இருந்து ‘கள்’ இறக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை கண்டுபிடித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் சம்பந்தப்பட்ட விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்து இறக்கி வைத்துள்ள கள்ளை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துசாமி ஆகியோர் தலைமையில் காமநாயக்கன்பாளையம் போலீசார் நேற்று வெள்ளநத்தம் பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்துக்கு வந்தனர். அங்கு தென்னை மரத்தில் ‘கள்’ இறக்க கட்டியிருந்த பானைகளை உடைத்தனர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து காமநாயக்கன்பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று தென்னை மரங்களில் ‘கள்’ இறக்க கட்டியிருந்த பானைகளை உடைத்தனர்.

இதைத்தொடர்ந்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி தலைமையில் திரளான விவசாயிகள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மதியம் வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது சில விவசாயிகள் நீரா பானம் தயாரித்து பாட்டிலில் எடுத்து வந்தனர். போலீசார் அந்த பாட்டில்களை வாங்கி பரிசோதனை செய்தனர். அங்கிருந்த பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் விவசாயி கொண்டு வந்த நீரா பானத்தை வாங்கி அருந்தினார்.

பின்னர் விவசாயிகள், கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியை சந்தித்து விவசாயிகள் முறையிட்டனர். நீரா பானத்தை விற்பனை செய்ய அரசு பரிசீலனை செய்து வரும் நிலையில், போலீசார் அத்துமீறி தோட்டத்துக்குள் புகுந்து தென்னை மரங்களில் நீரா எடுக்க கட்டியிருந்த பானைகளை உடைப்பதாகவும், மிகவும் தரக்குறைவாக விவசாயிகளை பேசி மிரட்டுவதாகவும் கூறினார்கள். இதைத்தொடர்ந்து திருப்பூர் சப்-கலெக்டர் தலைமையில் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார்.

பேச்சுவார்த்தை

அதன்படி திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் வந்தனர். பேச்சுவார்த்தையின் போது, நீரா பானம் இறக்குபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க கூடாது என்று கோரிக்கை முன்வைத்தனர். ஆனால் நீரா பானம் இறக்குபவர்கள் மீது இது போன்ற நடவடிக்கை தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் அழைத்து வைத்து தங்களை மிரட்டுவதாக கூறி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து, நீரா பானத்தை கையில் வைத்து கொண்டு அரை நிர்வாணமாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு வந்த போலீசார் மற்றும் தெற்கு தாசில்தார் சுப்பிரமணியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்