விருகம்பாக்கத்தில் பெண்ணிடம் பணப்பையை பறித்து சென்ற வாலிபர் கைது

விருகம்பாக்கத்தில் பெண்ணிடம் பணப்பையை பறித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.#tamilnews

Update: 2018-01-22 22:30 GMT
பூந்தமல்லி,

விருகம்பாக்கம், நடேசன் நகரை சேர்ந்தவர் ஆனந்தஜோதி (வயது 35), நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மொபெட்டில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் ஆனந்தஜோதி அருகில் சென்று அவர் கையில் வைத்திருந்த பணப்பையை பறித்து கொண்டு தப்பிச்சென்று விட்டனர். அந்த பையில் ரூ.12 ஆயிரம் மற்றும் வங்கி ஏ.டி.எம். கார்டுகள் இருந்தன.

இதுகுறித்து, விருகம்பாக்கம் போலீசில் ஆனந்தஜோதி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

வாலிபர் கைது

அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் அந்த மொபெட்டின் நம்பரை வைத்து அந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வந்தனர்.

விசாரணையில், பணப்பையை பறித்துச் சென்றது வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர், பாரதி நகர் 3-வது தெருவை சேர்ந்த கமலக்கண்ணன் (என்ற) கமல் (22), என்பது தெரியவந்தது. இதையடுத்து கமலக்கண்ணனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு மொபெட் மற்றும் ரூ.5 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நண்பருக்கு வலைவீச்சு

கமலக்கண்ணன் ஏற்கனவே பல கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில் வெளியே வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

பணப்பை பறிப்பு சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரும், கமலக்கண்ணனின் நண்பருமான தக்காளி (என்ற) பிரபாகர்(20), என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்