காதல் மனைவி கழுத்தை அறுத்து கொலை என்ஜினீயரிங் மாணவர் கைது

திருமணமான 21 நாளில் காதல் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த என்ஜினீயரிங் மாணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-01-22 23:00 GMT
திருச்சி,

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகேயுள்ள எரகுடி கிராமத்தில் வசிப்பவர் கண்ணன். லாரி டிரைவர். இவரது மகன் விஜய் (வயது 23). இவர் துறையூர் அருகேயுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவரது அத்தை மகள் சரண்யா (19). இவர் துறையூர் அருகேயுள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை 2-ம் ஆண்டு படித்து வந்தார். இருவரும் காதலித்்து வந்தனர். இதற்கு சரண்யாவின் தாய் மல்லிகா எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதி, பால் வாங்க சென்ற சரண்யாவை, விஜய்யின் மைத்துனர் அழைத்துக்கொண்டு நாமக்கல் சென்று விட்டதாக மல்லிகாவுக்கு தெரியவந்தது. இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசில் மல்லிகா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் நாமக்கல்லுக்கு சென்று இருவரையும் அழைத்து வந்து அவர்களது உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விஜய்க்கும், சரண்யாவுக்கும் நாமக்கல்லில் உள்ள ஒரு கோவிலில் கடந்த 1-ந் தேதி திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. சரண்யா, கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்ததன்பேரில், உறவினர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். காதல் தம்பதியினர் விஜய் வீட்டின் மாடியில் வசித்து வந்தனர். இந்நிலையில், விஜய் வேறு பெண்ணுடன் செல்போனில் அடிக்கடி பேசி வந்தாராம். இதனை சரண்யா கண்டித்தார். இதனால் காதல் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதேபோல் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணி அளவில் சரண்யாவுக்கும், விஜய்க்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டது. சத்தம் கேட்டு அருகே வசிக்கும் மல்லிகா, அவருடைய மூத்த மகள் கவுசல்யா, மருமகன் சரவணன் ஆகிய 3 பேரும் சென்று பார்த்தபோது, கழுத்து, கையில் பிளேடால் அறுக்கப்பட்டு சரண்யா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர்களை பார்த்ததும் விஜய் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசில் மல்லிகா புகார் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு கோவிந்தராஜ், சப்-கலெக்டர் ராஜ்குமார், துறையூர் இன்ஸ்பெக்டர் மனோகரன், துறையூர் தாசில்தார் சந்திரகுமார் ஆகியோரும் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், சரண்யாவை விஜய் பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் சரண்யா உடல், பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த விஜயை உப்பிலியபுரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரண்யாவிற்கு திருமணமாகி 21 நாட்களே ஆவதால் சப்-கலெக்டர் ராஜ்குமார் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

காதல் மனைவியை என்ஜினீயரிங் மாணவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்