மும்பை மாரத்தான் போட்டி 40 ஆயிரம் பேர் கலந்துகொண்டு ஓடினர்

மும்பையில் நடந்த மாரத்தான் போட்டியில் சுமார் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டு ஓடினர்.

Update: 2018-01-21 23:00 GMT
மும்பை,

மும்பையில் நடந்த மாரத்தான் போட்டியில் சுமார் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டு ஓடினர்.

மும்பை மாரத்தான்

மும்பையில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் ‘மும்பை மாரத்தான்’ என்ற பெயரில் மிகப்பெரிய அளவில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ‘மும்பை மராத்தான்’ போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டி சி.எஸ்.எம்.டி. பகுதியில் இருந்து தொடங்கி பாந்திரா ஒர்லி சீ லிங்க் வரை சென்று மீண்டும் சி.எஸ்.எம்.டி.யில் முடிவடைந்தது.

போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடந்தது. இதில், மும்பை உள்பட மாநிலம் முழுவதிலும் இருந்தும், வெளிமாநிலம், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதுதவிர பல்வேறு அரசு துறையினர், தனியார் நிறுவனத்தினர், தொண்டு நிறுவனத்தினர் குழுக்களாக கலந்து கொண்டனர்.

40 ஆயிரம் பேர் பங்கேற்பு

இதில், பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வித்தியாசமான ஆடைகளை அணிந்து மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டிகளை சி.எஸ்.எம்.டி.யில் அமைக்கப்பட்டு இருந்த மேடையில் இருந்தவாறு கவர்னர் வித்யாசாகர் ராவ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அங்கு குவிந்து இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆர்வமாக மாரத்தானில் கலந்துகொண்டு ஓடினர்.இந்த போட்டியில் பொதுமக்கள் மட்டுமின்றி நடிகை காஜல் அகர்வால் உள்ளிட்ட திரை பிரபலங்கள், தொழில் அதிபர்கள், டப்பாவாலாக்கள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் என சுமார் 40 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

வெற்றி பெற்றவர்கள் விவரம்

இதில், இந்தியர்களுக்கான முழு மராத்தான் போட்டியில் தொனகல் கோபி போட்டி தூரத்தை 2 மணி 16 நிமிடம் 51 வினாடிகளில் கடந்து முதல் இடத்தை பிடித்தார். 2-ம் இடத்தை நித்தேந்திர ராவத்தும், 3-ம் இடத்தை சிரினு புகுதாவும் பிடித்தனர். பெண்களுக்கான முழு மாரத்தான் போட்டியில் மத்திய ரெயில்வே ஊழியர் சுதா சிங் முதல் இடம் பெற்றார். ஜோதி காவ்தே 2-வது இடத்தையும், 3-வது இடத்தை பிரவுல் சவுத்ரியும் பிடித்தனர்.

இதேபோல ஆண்களுக்கான அரை மாரத்தான் போட்டியில் முறையே பிரதீப் சிங், சங்கர் மன் தப்பா, தீபக் கும்பார் ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். பெண்களுக்கான போட்டியில் சஞ்சீவினி, மோனிகா, ஜூமா ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.

மும்பை மாரத்தான் போட்டியையொட்டி நேற்று சி.எஸ்.எம்.டி. பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்