பஸ் கட்டண உயர்வு எதிரொலி: மேட்டூர்- ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

பஸ் கட்டண உயர்வு காரணமாக மேட்டூர், ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

Update: 2018-01-21 22:30 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் மேட்டூர், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. மேட்டூருக்கு சேலம், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் சுற்றுலா வந்து செல்கிறார்கள். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் மேட்டூர் அணை, பூங்கா ஆகியவற்றை பார்த்து ரசித்து செல்கிறார்கள். சிறுவர், சிறுமிகள் மேட்டூர் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்வார்கள். குறிப்பாக விடுமுறை தினங்களில் மேட்டூரில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அங்குள்ள அணைக்கட்டு முனியப்பன் கோவிலுக்கும் திரளானவர்கள் வந்து செல்வார்கள்.

தற்போது தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. முன்பு சேலத்தில் இருந்து மேட்டூர் செல்ல அரசு பஸ்சில் கட்டணம் ரூ.24 ஆக இருந்தது. தற்போது ரூ.36 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை தினமான நேற்று மேட்டூருக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. பஸ்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

ஏற்காடு

இதேபோல் ஏற்காடுக்கும் நேற்று சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. சுற்றுலா தலமான ஏற்காட்டில் சேர்வராயன் கோவில், ராஜேஸ்வரி கோவில், பொட்டானிக்கல் கார்டன், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாய்ண்ட், ரோஜா தோட்டம், படகு இல்லம் உள்ளிட்ட பல இடங்கள் உள்ளன. சுற்றுலா வருபவர்கள் இந்த இடங்களுக்கு செல்ல தவறுவது இல்லை. விடுமுறை நாட்களில் ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். சேலம் மாவட்டம் மட்டுமின்றி சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் வந்து செல்வார்கள்.

சுற்றுலா பயணிகள் வெளிமாவட்டங்களில் இருந்து சேலம் வருவார்கள். பின்னர் சேலத்தில் இருந்து பஸ்சில் ஏற்காடுக்கு செல்வார்கள். சேலத்தில் இருந்து ஏற்காடுக்கு முன்பு பஸ் கட்டணம் ரூ.17 ஆக இருந்தது. தற்போது ரூ.28 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக நேற்று ஏற்காடுக்கு குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே வந்திருந்தனர். இதுபற்றி சுற்றுலா பயணிகள் கூறும்போது, பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் குறைந்த அளவில் வந்துள்ளனர். நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டு இருந்ததால் தற்போது வந்துள்ளோம். முன்பு பஸ்சில் சேலத்தில் இருந்து ஏற்காடுக்கு வந்து செல்ல 2 பேருக்கு கட்டணம் ரூ.68 ஆக இருந்தது. தற்போது 2 பேர் வந்து செல்ல ரூ.112 ஆகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் பெரும்பாலானோர் வந்து செல்வதை பார்க்க முடிந்தது, என்றனர். 

மேலும் செய்திகள்