வால்பாறையில் காட்டுயானை சாவு ஆண் யானை தாக்கியதில் பரிதாபம்

வால்பாறையில் செல்லமாக அழைக்கப்பட்ட பெண் யானை, ஆண்யானை தாக்குதலில் பரிதாபமாக இறந்தது.

Update: 2018-01-21 23:00 GMT
வால்பாறை,

வால்பாறை பகுதியில் அதிகளவில் காட்டுயானைகள் சுற்றித்திரிந்து வாழ்ந்து வருகின்றன. இதில் பல்வேறு யானைகள் கூட்டம், கூட்டமாக வாழ்ந்து வருகின்றன. இந்த கூட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் இருக்கும். ஒரு சில யானைக்கூட்டங்களில் 7, 5, 3, 2 என்று யானைகள் வாழ்ந்து வருகின்றன. இதில் ஒரு காட்டுயானை மட்டும், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மற்ற காட்டுயானைகளுடன் வனப்பகுதிகளுக்குள் சென்று வாழ முடியாமல் தனியாக சுற்றி வந்தது.

இதனால் இந்த யானை, வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் உள்ள எஸ்டேட் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதி, வால்பாறை நகர் பகுதியை ஒட்டிய வாழைத்தோட்டம், காமராஜ்நகர் குடியிருப்பு ஆகிய இடங்களில் உள்ள வாழை மரங்களையும், பலாமரங்களையும் மட்டுமே சாப்பிட்டுக் கொண்டு மக்களோடு மக்களாக யாருக்கும் தொந்தரவு இல்லாமல் வாழ்ந்து வந்தது. வால்பாறை நகர் பகுதி மக்களும் எஸ்டேட் பகுதி மக்களும் இந்த யானையை தொந்தரவு செய்யாமல் பார்த்து ரசித்து வந்தனர்.

வால்பாறை பகுதி மக்கள் அனைவரும் இந்த பெண் யானைக்கு சிங்காரி என்று செல்லமாக பெயர் வைத்து அழைத்துவந்தனர். வால்பாறை பகுதியில் யானைகள் நடமாட்டம் குறித்து ஆராய்ச்சி செய்துவரும் ஆராய்ச்சியாளர்கள் இந்த பெண்யானைக்கு மோனிக்கா (வயது 50) என்று பெயர் வைத்திருந்தனர். இந்த யானை கடந்த ஒரு வாரமாக உருளிக்கல் எஸ்டேட் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் முகாமிட்டு வாழை மரங்களை சாப்பிட்டு கொண்டு குடியிருப்பை சுற்றி, சுற்றி வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு உருளிக்கல் எஸ்டேட் கீழ்பிரிவு குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள தேயிலைத் தோட்ட பகுதியில் நின்று கொண்டிருந்தது.

இந்த தேயிலைத் தோட்டத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் காட்டுயானைகள் கூட்டம் நின்று கொண்டிருந்துள்ளது. இந்த யானைக் கூட்டத்தைச் சேர்ந்த ஆண்யானைக்கும் இந்த மோனிகாவுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. இதில் ஆண் யானை மோனிகாவைகடுமையாக தாக்கியுள்ளது. இதனால் அதன் உடல்முழுவதும் பலத்தகாயம் ஏற்பட்டு உருளிக்கல் எஸ்டேட் கீழ்பிரிவு 10-ம் நம்பர் தேயிலைத் தோட்ட பகுதிக்கு வந்து மோனிகா யானை இறந்துபோனது. இது குறித்து எஸ்டேட் நிர்வாகம் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.வனச்சரகர் சேகர் தலைமையில் வனத்துறையினர்,காட்டுயானைகளின் ஆராய்ச்சியாளர்கள் சம்பவயிடத்திற்கு சென்று பார்த்தனர். இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக களஇயக்குனர் கணேசன், மாவட்டவனஅலுவலர் சுப்பையா, வனத்துறை கால்நடை டாக்டர் ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இரவு நேரமாகி விட்டதால் இன்று (திங்கட்கிழமை) இறந்து போன பெண்யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. வால்பாறையின் செல்ல யானையாக கருதப்பட்ட மோனிகா யானை இறந்த செய்தி கேட்டு, அந்த பகுதிபொதுமக்களும் எஸ்டேட் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களும் வேதனைஅடைந்தனர். அதன் சோக முடிவால் தாங்களும் சோகம் அடைந்து காணப்பட்டனர்.

மேலும் செய்திகள்