ஜல்லிக்கட்டில் 487 காளைகள் சீறிப்பாய்ந்தன மாடுபிடி வீரர்கள் உள்பட 11 பேர் காயம்

பெரிய அணைக்கரைப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 487 காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன. இதில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2018-01-21 22:45 GMT
வையம்பட்டி,

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள பெரிய அணைக்கரைப்பட்டியில் புனித அந்தோணியார் ஆலய பொங்கல் விழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதை ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் பொன் ராமர் தொடங்கி வைத்தார். முன்னதாக ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக 501 காளைகள் அழைத்துவரப்பட்டிருந்தன. இந்த காளைகளை ஜல்லிக்கட்டு மைதானம் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் 14 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. இதனால் 487 காளைகளுக்கே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி கிடைத்தது.

இதேபோல் ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக 279 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்து இருந்தனர். இவர்களை டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் 10 பேர் உடல் தகுதி இல்லாத நிலையில் 269 பேர் மட்டுமே களத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வாடிவாசலில் இருந்து முதலில் ஊர் காளை அவிழ்த்து விடப்பட்டது. அந்த காளையை யாரும் பிடிக்க கூடாது என்பதால் மாடுபிடி வீரர்கள் அனைவரும் ஒதுங்கிக் கொண்டனர். இதனால் காளை மிகவும் மெதுவாக நடந்து சென்றது. இதைத் தொடர்ந்து உள்ளூர் காளைகளும், அதன் பின்னர் திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.

மூக்கு கயிறு அறுக்கப்பட்டதும், வாடிவாசலை விட்டு வெளியே வந்த காளைகள் பலவும் யாரிடமும் சிக்காமல் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டன. சில காளைகள் தன்னை அடக்க யார் வருவது என்று கேட்பது போல், மைதானத்தில் நின்று கொண்டிருந்தன. இதைப்பார்த்த மாடுபிடி வீரர்கள் அந்த காளைகளை அடக்க முயன்ற போது அனைவரையும், ஆவேசமாக விரட்டின. இருப்பினும் காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.

இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் சைக்கிள், பீரோ, கட்டில், மின்விசிறி, சில்வர் பாத்திரங்கள் என பல்வேறு பரிசுப் பொருட்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டில் வீரர்கள் ஒவ்வொரு குழுக்களாக மாடுபிடிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டு மைதானத்தில் 487 காளைகள் சீறிப்பாய்ந்தன. ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 6 மாடுபிடி வீரர்கள், 3 மாட்டின் உரிமையாளர்கள், 2 பார்வையாளர்கள் என 11 பேர் காயமடைந்தனர். இதில் மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த மாட்டின் உரிமையாளர் நாகராஜ் என்பவரின் மார்பில் மாடு உதைத்து தள்ளியதில் அவர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மற்றவர்கள் அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்று சென்றனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் ஜல்லிக்கட்டை காண்பதற்காக ஏராளமானவர்கள் வந்திருந்தனர். இதனால் பெரிய அணைக்கரைப்பட்டி பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கல்யாண், மணப்பாறை தாசில்தார் தனலெட்சுமி மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் ஜல்லிக்கட்டு விதிமுறைகளின் படி முறையாக நடத்தப்படுகிறதா? என்பதை கண்காணித்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு விழாக்குழுவினரும், பெரிய அணைக்கரைப்பட்டி ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்