மழை பெய்ய வேண்டி மதுரைவீரன் சாமிக்கு மதுபாட்டில்களை படைத்து சிறுவர்கள் வழிபாடு

மழை பெய்ய வேண்டியும், மது குடிக்கக் கூடாது என்பதற்காகவும் மதுரைவீரன்சாமிக்கு மதுபாட்டில்களை படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் குடிக்கக்கூடாது என்று கூறி பெற்றோரின் கால்களில் விழுந்து வணங்கினர்.

Update: 2018-01-21 22:45 GMT
வேடசந்தூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள இ.சித்தூரில் மதுரைவீரன் கோவில் உள்ளது. இங்கு முழுக்க முழுக்க கூலித்தொழிலாளர்களே வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை முறையாக பெய்யவில்லை. மேலும் பலர் மதுவால் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் அந்த ஊரை சேர்ந்த சிறுவர்கள், மழை பெய்ய வேண்டியும், யாரும் மது குடிக்கக் கூடாது என்று வலியுறுத்தவும் தங்களின் குலதெய்வமான மதுரைவீரன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்த முடிவு செய்தனர். இதற்கான பணத்தை சிறுவர்கள் தாங்களாகவே சேகரித்து வைத்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த மாதம் சிறப்பு வழிபாடு நடத்த முடிவு செய்தனர். இந்த சிறப்பு வழிபாடு நடத்துவது குறித்து பெற்றோர்களிடமும், ஊர் மக்களிடமும் தெரிவித்தனர். அதன்படி நேற்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. முன்னதாக மேள, தாளம் முழங்க மதுபாட்டில்கள், பூஜை பொருட்களை சிறுவர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

பின்னர் மதுபாட்டில்களை மதுரைவீரனுக்கு படைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. கிடா வெட்டியும், பொங்கல் வைத்தும் வழிபாடு நடத்தப்பட்டது. அதன்பிறகு மதுரைவீரன் முன்பு படையலிட்ட மதுபாட்டில்களை எடுத்து கோவில் முன்பு தரையில் ஊற்றி யாரும் மது குடிக்கக் கூடாது என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்களை கோவில் முன்பு வரிசையாக நிறுத்தி வைத்து குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் யாரும் மது குடிக்காதீங்க... என்று அவர்களது காலில் விழுந்து வணங்கினர். இதைக்கண்ட பொதுமக்கள் கண்கலங்கினர். மழை பெய்யவேண்டியும், யாரும் மது குடிக்கக் கூடாது என்றும் சிறுவர்களே சிறப்பு வழிபாடு நடத்திய சம்பவம் கிராம மக்களை நெகிழ்ச்சி அடைய செய்தது. 

மேலும் செய்திகள்