டைட்டானிக்கின் பிரமிப்பான கட்டுமானம்

கப்பல் கட்டுமானத்தில் முதன் முறையாக மூழ்காத கப்பல் கட்ட திட்டமிட்டு, அதன்படி டைட்டானிக் கப்பல் வடிவமைக்கப்பட்டது. ஆனால் இந்த கப்பல் தொடக்க கடல் பயணத்தின் போது மூழ்கியது சோகமான பதிவாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.

Update: 2018-01-21 05:23 GMT
டைட்டானிக் கப்பல் விபத்து நடைபெற்று நூறு ஆண்டுகள் கடந்தும், அதன் தாக்கம் சற்றும் குறையாமல் வெகு நேர்த்தியுடன், நிஜக்கப்பல் போன்று மக்கள் கண்முன் 1997-ம் வருடத்தில் வெளிவந்த டைட்டானிக் திரைப்படம் கொண்டு வந்தது.

திரைப்படம் சொன்ன காதல் கதை தவிர, மற்ற அனைத்து காட்சிகளும் சம்பவ தின நிகழ்வின் சாட்சியங்களின் அடிப்படையில் படமாக்கப்பட்டதாகும். பல நூறு பக்கங்களில் சொல்ல முடியாத சோக சம்பவத்தை 194 நிமிடத்தில் தத்ரூபமாக காண்பித்து 11 ஆஸ்கார் விருதுகளை அந்த படம் பெற்றது.

டைட்டானிக்கின் முழுப்பெயர் ஆர்.எம்.எஸ்.டைட்டானிக். இதில் பெயருக்கு முன் வரும் ஆர்.எம்.எஸ். என்பது ராயல் மெயில் ஸ்டீமர் என்பதை குறிக்கும். அதாவது இது தபால்கள் எடுத்துச் செல்லும் கப்பல் என்பதன் சுருக்கம். இந்தக் கப்பல் அயர்லாந்து நாட்டின் பெல்பாஸ்ட் நகரில் கட்டப்பட்டது. டைட்டானிக் கப்பல் கட்டுமானம் 1909 மார்ச் 31-ந்தேதி தொடங்கி 1911 மே 31-ந்தேதி முடிவுற்றது. 3,000 வேலையாட்கள், 3 மில்லியன் டாலர்கள் செலவு செய்து கப்பலை கட்டி முடித்தனர்.

அதன் இன்றைய மதிப்பு 4,000 மில்லியன் டாலர் என கணக்கிடப்படுகிறது. இந்த கப்பலின் முதல் பயணம் 1912 ஏப்ரல் 10-ந்தேதி தொடங்கியது.

கப்பலின் நீளம் 882 அடி, உயரம் 175 அடி, மொத்த எடை 46,328 டன், வேகம் 21 நாட் (39 கிலோ மீட்டர்) இதன் அதிகவேகம் 23 நாட் (43 கிலோ மீட்டர்). டைட்டானிக் கப்பலில் அதிகபட்சமாக பயணிகள், சிப்பந்திகள் உள்பட 3,547 பேர் பயணிக்கலாம். இந்த கப்பல் கட்டுமானத்தின் போது அன்றைய அனைத்து தொழில்நுட்பங்களும் அதிகபட்சமாக பயன்படுத்தப்பட்டன. ஒருநாளைக்கு 825 டன் நிலக்கரி இந்த கப்பலின் எந்திரம் இயக்க பயன்படுத்தப்பட்டது.

டைட்டானிக் கப்பலில் மொத்தம் 9 மாடிகள், ஆழம் 59.5 அடி, உயரம் 60.5 அடி எனவும் சொல்லப்படுகிறது. மொத்தமாக 4 புகை போக்கிகள், இவற்றின் மொத்த உயரம் 175 அடி, இதில் 3 புகை போக்கவும் 1 காற்று போக்கியாகவும் பயன்பட்டன. மொத்தத்தில் டைட்டானிக் கப்பல், 11 மாடி உயரமான கட்டிடத்திற்கு சமமாக ஒப்பிடப்படுகிறது.

மேலும் செய்திகள்