மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு பொருத்தப்பட்டன

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பல்லுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இதில் மூளைச்சாவடி அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு பொருத்தப்பட்டன.

Update: 2018-01-20 23:37 GMT
புதுச்சேரி,

வில்லியனூர் அருகே மணவெளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 25). இவர் கடந்த 16-ந் தேதி மாலை மதகடிப்பட்டு அருகில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அதில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாததால் அவர் மூளைச்சாவு அடைந்தார்.

இதனை தொடர்ந்து சுரேசின் உடல் உறுப்புகளை தானமாக கொடுப்பதற்கு அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். இதைத்தொடர்ந்து மூளைச்சாவு அடைந்த் சுரேஷின் உடலில் இருந்து கல்லீரல், இரண்டு சிறுநீரகம், 2 கண்கள் போன்றவை தானமாக பெறப்பட்டது. ஜிப்மர் டாக்டர்கள் குழுவினர் இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்தனர்.

தானமாக பெறப்பட்ட சுரேசின் உறுப்புகள் 5 பேருக்கு பொருத்தப்பட்டன. அவரது உறுப்புகளை பெற்ற 5 நோயாளிகளும் தற்போது நலமுடன் இருந்து வருகின்றனர். இதற்காக சுரேஷ் குடும்பத்தினரை அழைத்து ஜிப்மர் இயக்குனர் டாக்டர் சுபாஷ் சந்திர பரிஜா பாராட்டினார்.

இதுகுறித்து ஜிப்மர் இயக்குனர் டாக்டர் சுபாஷ் சந்திர பரிஜா கூறியதாவது:-

ஜிப்மர் மருத்துவமனையானது பல்லுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறப்பு பிரிவினை அமைப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஜிப்மரில் இதுவரை 149 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2017-ம் ஆண்டு முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் நடைபெற்று வருகிறது. அத்துடன் கண் மாற்று சிகிச்சை தொடர்ந்து சீரிய முறையில் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்