பஸ் கட்டண உயர்வை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்கள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

பிச்சைக்காரர்கள் கூட 1 ரூபாய் வாங்க மாட்டார்கள். எனவே இந்த பஸ் கட்டண உயர்வை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளத்தான் செய்வார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

Update: 2018-01-20 23:00 GMT
மதுரை,

மதுரை மாநகராட்சி 88, 90 மற்றும் 91 ஆகிய வார்டுகளில் ரூ.49.92 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர் முன்னிலை வகித்தார். கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கி பேசினார். அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு பின்பு பஸ் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. 6 ஆண்டுகளுக்கு முன்பு 1 லிட்டர் டீசல் விலை ரூ.43. ஆனால் தற்போது ரூ.63 ஆக உயர்ந்துள்ளது. டீசல் விலை உயர்வு மட்டுமின்றி பணியாளர்கள் சம்பள உயர்வு, புதிய பஸ்கள் வாங்குதல் போன்ற பணிகளுக்காக அதிக அளவில் நிதி தேவைப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊழியர்கள் கூட வேலை நிறுத்தப் போராட்டம் செய்தனர். இதற்கும் நிதி பற்றாக்குறை தான் காரணம்.

எனவே பஸ் கட்டண உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று. நாங்கள் மனமுவந்து இந்த உயர்வை செய்யவில்லை. வேறு வழியில்லாமல் உயர்த்தி இருக்கிறோம். இந்த உயர்வும், மற்ற மாநிலங்களை விட ஒப்பிடும் போது மிகவும் குறைவானது.

பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.3-ல் இருந்து ரூ.5 ஆக உயர்த்தி இருக்கிறோம். வெறும் ரூ.2 தான் கட்டண உயர்வு. இப்போது எல்லாம் 1 ரூபாய்க்கு எல்லாம் மதிப்பு இல்லாமல் போய் விட்டது. பிச்சைக்காரர்களுக்கு கூட 1 ரூபாய் போட்டால், அதை அவர்கள் வாங்க மாட்டார்கள். போட்டவர்களின் முகத்தை ஏற, இறங்க பார்ப்பார்கள். எனவே விலை உயர்வை பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்