மதுரை மாநகர பஸ்களில் மட்டும் ‘கட்டணக்கொள்ளை’ 100 சதவீதத்துக்கும் மேல் அதிகரிப்பு

தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு மதுரையில் மட்டும் 100 சதவீதத்திற்கு மேல் மாநகர பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

Update: 2018-01-20 22:45 GMT
மதுரை,

தமிழகத்தில் சாதாரண பஸ்கள், எல்.எஸ்.எஸ். பஸ்கள், சிட்டி எக்ஸ்பிரஸ் பஸ்கள், தாழ்தள பஸ்கள் என 4 விதமான நகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சாதாரண பஸ்களில் குறைந்த கட்டணமும், தாழ்தள பஸ்களில் அதிக கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தாழ்தள சொகுசு பஸ்களின் எண்ணிக்கை மிக குறைவாகவும், மற்ற பஸ்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கும். ஆனால் மதுரையில் மட்டும் தாழ்தள சொகுசு பஸ்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவும், மற்ற பஸ்களின் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது. இதன்காரணமாக, தமிழகத்திலே மதுரையில் தான் பஸ்கட்டணம் அதிகம் என்பதனை யாரும் மறுக்க முடியாது.

இது குறித்து பல முறை புகார் கொடுத்தும் அரசு போக்குவரத்துக் கழகம் கண்டு கொள்ளவேவில்லை. இது சம்பந்தமாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று முதல் தமிழகம் முழுவதும் பஸ்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஏற்கனவே கூடுதல் கட்டணம் செலுத்தி வந்த மதுரை மக்கள், இன்னும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

மதுரையில் தற்போது சிட்டி எக்ஸ்பிரஸ், தாழ்தள பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அவற்றில் சிட்டி எக்ஸ்பிரஸ் பஸ்களில் ரூ.5 ஆக இருந்த குறைந்தபட்ச கட்டணம் ரூ.9 ஆக உயர்ந்துள்ளது. ரூ.16 ஆக இருந்த அதிகபட்ச கட்டணம் ரூ.30 ஆக உயர்ந்துள்ளது.

தாழ்தள பஸ்களில் ரூ.7 ஆக இருந்த குறைந்தபட்ச கட்டணம் ரூ.13 ஆக உயர்ந்துள்ளது. ரூ.24 ஆக இருந்த அதிகபட்ச கட்டணம் ரூ.41 ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் இந்த டிக்கெட் கட்டண உயர்வுடன் ஸ்டேஜ் எண்ணிக்கையையும் அதிகரித்து கட்டணக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதற்கு நல்ல உதாரணமாக பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அலங்காநல்லூர் செல்லும் சிட்டி எக்ஸ்பிரஸ் பஸ்சில் ரூ.12 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.22 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசின்விதிப்படி ரூ.12 ஆக இருக்கும் கட்டணம் ரூ.16 ஆக மட்டுமே உயர்த்தப்பட வேண்டும். ஆனால் தற்போது அந்த வழித்தடத்தின் ஸ்டேஜ் எண்ணிக்கையை அதிகரித்து ரூ.22 கட்டணம் வசூலிக்கின்றனர். அதே போல் கட்டண உயர்வின்படி தாழ்தள பஸ்களில் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து மாட்டுத்தாவணிக்கு ரூ.9 ஆக இருந்த கட்டணம் ரூ.15 ஆக மட்டுமே உயர்த்தப்பட வேண்டும். ஆனால் ஸ்டேஜ் எண்ணிக்கையை அதிகரித்து கட்டணத்தை ரூ.19 ஆக உயர்த்தி உள்ளனர்.

அரசு கட்டண உயர்வு மட்டும் செய்திருக்கும் நிலையில், மதுரையில் ஸ்டேஜ் எண்ணிகையையும் அதிகரித்து அதன் மூலம் இன்னும் கட்டணச்சுமையை ஏற்றும் வகையில் இங்குள்ளோர் தனி ராஜாங்கமே நடத்தி விட்டனர்.

பஸ் கட்டண உயர்வு ரூ.2 முதல் அதிகபட்சம் ரூ.7 வரை இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் நேற்று பஸ்சில் ஏறினர். ஆனால் கண்டக்டர் கூறிய தொகையை கேட்டு பயணிகள் அனைவரும் கொந்தளித்து கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் சரமாரியான கேள்விகளால் கண்டக்டர்கள் எதுவும் பேச முடியாமல் மவுனமாக இருந்தனர். சிலர் கட்டணத்தை கேட்டவுடன், வண்டியை நிறுத்துங்கள், நான் ஆட்டோவில் ஏறிச் சென்று விடுகிறேன் என்று பஸ்சில் இருந்து இறங்கிய நிகழ்வுகளும் ஆங்காங்கே அரங்கேறின. ஒவ்வொரு பஸ்சிலும் பயணிகள் கட்டண உயர்வு குறித்து கேள்வி எழுப்பியதுடன் அரசை கடுமையாக விமர்சித்த காட்சிகளை காண முடிந்தது.

நகர பஸ்களை போலவே வெளியூர் பஸ்களிலும் கட்டண உயர்வு மிக அதிகமாக உள்ளது. மதுரையில் இருந்து வெளியூர் செல்லும் சாதாரண பஸ்களில் 1 கிலோ மீட்டருக்கு 42 பைசா ஆக இருந்த கட்டணம் 60 பைசா ஆகவும். பாயின்ட் டூ பாயின்ட் பஸ்களில் 56 பைசா ஆக இருந்த கட்டணம் 80 பைசா ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மதுரையில் இருந்து திருச்சிக்கு சாதாரண பஸ்களில் ரூ.75 ஆக இருந்த கட்டணம் ரூ.110 ஆகவும், ஒன் டூ ஒன் பஸ்களில் ரூ.80 ஆக இருந்த கட்டணம் ரூ.122 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மதுரை-நெல்லை (பைபாஸ் ரைடர்) கட்டணம் ரூ.105-ல் இருந்து ரூ.162 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல் மதுரையில் இருந்து சென்னை மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பஸ் கட்டணமும் அதிக அளவில் உயர்ந்துள்ளது. மதுரையில் இருந்து சென்னைக்கு செல்லும் டீலக்ஸ் பஸ்சில் ரூ.325 ஆக இருந்த கட்டணம் ரூ.515 ஆக அதிகரித்துள்ளது. ஏசி பஸ்களில் ரூ.445 ஆக இருந்த கட்டணம் ரூ.686 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து பெங்களூரு செல்லும் பஸ்களில் ரூ.430 ஆக இருந்த கட்டணம் ரூ.605 ஆக உயர்ந்துள்ளது.

இந்த கட்டண உயர்வு பற்றி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மதுரையில் அரசின் விதிமுறைப்படி தான் பஸ் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்டேஜ் எண்ணிக்கையும் அரசு மாற்றி அமைத்து உள்ளது. மேலும் கட்டணத்துடன் நகர பஸ்களில் காப்பீட்டுத் தொகை ரூ.1-ம் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக தாழ்தள பஸ்களில் குறைந்தபட்சம் ரூ.7 ஆக இருந்த கட்டணம் ரூ.12 ஆகவும், இத்துடன் காப்பீட்டு தொகை ரூ.1-ம் சேர்த்து ரூ.13 ஆக வசூலிக்கப்படுகிறது. இதற்கு முன்பு பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து சிம்மக்கல் பகுதிக்கு ஒரு ஸ்டேஜ். அதற்கு கட்டணம் முன்பு ரூ.7. தற்போது இது ரூ.13 ஆகும்.

அதே பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து மாட்டுத்தாவணிக்கு 5-வது ஸ்டேஜ். முன்பு 2 முதல் 5 ஸ்டேஜ் வரை ஒரே கட்டணம் ரூ.9 வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது 2,3,4,5 என அனைத்து ஸ்டேஜ்களுக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து கோரிப்பாளையத்திற்கு ரூ.17-ம், மாட்டுத்தாவணிக்கு ரூ.19-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அரசு போக்குவரத்து கழகத்தில் ஒரு பஸ்சை ஒரு கிலோ மீட்டர் இயக்க மொத்தம் 32 ரூபாய் செலவு ஆகிறது. ஆனால் இதற்கு வரவு வெறும் ரூ.22 தான். நஷ்டம் ரூ.10. தற்போது டிக்கெட் விலை உயர்வால் 22 ரூபாய் வருவாய், ரூ.23 ஆக உயரும். இதன் மூலம் நஷ்டம் ரூ.9 ஆகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்