ராமநாதபுரம் மன்னரின் மகள் வீட்டில் ரூ.33 கோடி கொள்ளை சம்பவம்: நெல்லையில் மேலும் ஒருவர் கைது; துப்பாக்கி பறிமுதல்

சென்னையில் உள்ள ராமநாதபுரம் மன்னரின் மகள் வீட்டில் நடந்த ரூ.33 கோடி கொள்ளை சம்பவத்தில் நெல்லையில் மேலும் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

Update: 2018-01-20 20:45 GMT
நெல்லை,

சென்னையில் உள்ள ராமநாதபுரம் மன்னரின் மகள் வீட்டில் நடந்த ரூ.33 கோடி கொள்ளை சம்பவத்தில் நெல்லையில் மேலும் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். கைதானவரிடம் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

மன்னர் மகள் வீட்டில் ரூ.33 கோடி கொள்ளை

சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திக் சேதுபதி. இவர் ராமநாதபுரம் சமஸ்தான மன்னரான ராஜேசுவரனின் மூத்த மகள் விஜயா நாச்சியாரின் வளர்ப்பு மகன் ஆவார். விஜயா இறந்த பிறகு அவருடைய சொத்துக்கள் கார்த்திக் சேதுபதிக்கு செல்வது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது.

இந்த நிலையில் கார்த்திக் சேதுபதியை ஒரு கும்பல் கடத்திச் சென்று நெல்லையில் உள்ள ஒரு ஓட்டலில் அடைத்து வைத்தனர். பின்னர் அவரது வீட்டில் இருந்து ரூ.33 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் மற்றும் சிலைகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

5 பேர் கைது

இது தொடர்பாக கார்த்திக் சேதுபதி சென்னை தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி நெல்லை தச்சநல்லூரை சேர்ந்த பிரகாஷ்(வயது 26), பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த ராஜ்சுந்தர்(26), நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்த அருண் பிரசாத், சங்கரன்கோவிலை சேர்ந்த நரேஷ் நாராயணன்(25), சேரன்மாதேவியை சேர்ந்த குருஞானம்(31) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

மேலும், நெல்லை புதிய பஸ் நிலையம் பகுதியில் கொள்ளை கும்பல் பயன்படுத்திய காரையும் போலீசார் கைப்பற்றினர்.

மேலும் ஒருவர் கைது; துப்பாக்கி பறிமுதல்

இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகர் 20-வது தெருவை சேர்ந்த சுதன்(வயது 45) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் சென்னை தனிப்படை போலீசார் நேற்று நெல்லைக்கு வந்தனர். அவர்கள் பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் உதவியுடன் சாந்தி நகருக்கு சென்றனர்.

அங்கு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார் வீட்டுக்குள் இருந்த சுதனை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து ஒரு ஜீப் மற்றும் ஒரு துப்பாக்கி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்