வேலூர் வந்த கவர்னருக்கு வரவேற்பு நாளை தூய்மை திட்டப்பணியில் பங்கேற்பு

தர்மபுரி செல்லும் வழியில் வேலூருக்கு வந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் நாளை வேலூரில் தூய்மை திட்ட பணியில் ஈடுபடுகிறார்.

Update: 2018-01-20 23:00 GMT
வேலூர்,

தமிழக கவர்னர் பன்வாரிலால்புரோகித் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது தூய்மை திட்ட பணியில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். மேலும் அவர் அரசின் திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். அவர் வேலூரிலும் தூய்மை பணிகளை தொடங்கி வைத்து ஆய்வு பணிகளில் ஈடுபட உள்ளார்.

இந்த நிலையில் அவர் தர்மபுரி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அங்கு செல்லும் வழியில் வேலூருக்கு நேற்று வந்தார். வேலூர் சுற்றுலா மாளிகைக்கு பகல் 12.30 மணி அளவில் வந்த அவருக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.ஏ.ராமன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு பகலவன், மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், உதவி கலெக்டர் செல்வராஜ், தாசில்தார் பாலாஜி உள்பட பலர் உடனிருந்தனர். பின்னர் அவர் மதிய உணவை முடித்து விட்டு சுமார் 1.15 மணி அளவில் தர்மபுரிக்கு சென்றார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் மாலை வேலூருக்கு வருகிறார். ஸ்ரீபுரம் தங்கக்கோவிலுக்கு செல்லும் அவர் கோவிலை சுற்றிப்பார்க்கிறார். அதன் பின்னர் மாலை 6 மணியளவில் காட்பாடி சன்பீம் பள்ளியில் மாதா அமிர்தானந்தமயி சார்பில் பெண்களுக்கான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பின்னர் இரவு 9 மணி அளவில் அவர் வேலூரில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு திரும்புகிறார். இரவில் இங்கு தங்கும் அவர் நாளை (திங்கட்கிழமை) வேலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

முதல் நிகழ்ச்சியாக வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே காலை 10 மணி முதல் 11 மணி வரை தூய்மை திட்ட பணியில் ஈடுபடுகிறார். அதைத்தொடர்ந்து மதிய ஓய்விற்கு பின்னர் வேலூர் சுற்றுலா மாளிகையில் பொதுமக்களிடம் மனுக்களை பெறுகிறார். பின்னர் நடக்கும் ஆய்வுக்கூட்டத்தில் திட்டப்பணிகள் குறித்து கவர்னருக்கு அதிகாரிகள் விளக்குகின்றனர். மாலை 4 மணி அளவில் வேலூர் கோட்டையை பார்வையிடும் அவர் அங்கிருந்து சென்னைக்கு திரும்புகிறார். 

மேலும் செய்திகள்