புவனகிரியில் சலூன் கடைக்காரர் கத்தியால் குத்தி கொலை மகன்- மருமகள் கைது

புவனகிரியில் சலூன் கடைக்காரரை மகன், மருமகள் சேர்ந்து கத்தியால் குத்திகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Update: 2018-01-19 22:15 GMT
சிதம்பரம்,

சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி தாமரைக்குளம் கீழக்கரையை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது 62). இவரது மகன் பாலமுருகன்(42). இவருடைய மனைவி தேன்மொழி(37). பன்னீர்செல்வம் தனது மகன் பாலமுருகன் வீட்டில் தங்கியிருந்தார். தந்தை, மகன் இருவரும் புவனகிரி கடைவீதியில் சலூன் கடை வைத்து நடத்தி வந்தனர். இந்த கடையை நடத்துவதில் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக, இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலமுருகன் மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது கடை நடத்துவது தொடர்பாக அவருக்கும், பன்னீர்செல்வத்துக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் ஆபாசமாக திட்டி தாக்கி கொண்டனர். அப்போது அங்கு வந்த தேன்மொழி, பாலமுருகனுக்கு ஆதரவாக பன்னீர்செல்வத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் ஆத்திரமடைந்த பாலமுருகன் தனது தந்தையை கொலை செய்ய முடிவு செய்து அவரின் இரு கைகளையும் பிடித்து கொண்டார். அப்போது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தேன்மொழி, பன்னீர்செல்வத்தை சரமாரியாக குத்தினார்.இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் புவனகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பன்னீர்செல்வத்தை கொலை செய்த பாலமுருகன், தேன்மொழி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

மேலும் செய்திகள்