தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் 4 முதுகலை பாடப்பிரிவுகள் தொடங்க நடவடிக்கை புதிய டீன் லலிதா பேட்டி

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் 4 முதுகலை பாடப்பிரிவுகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய டீன் லலிதா கூறினார்.

Update: 2018-01-19 21:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் 4 முதுகலை பாடப்பிரிவுகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய டீன் லலிதா கூறினார்.

பொறுப்பேற்பு

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனாக பணியாற்றி வந்த சாந்தகுமார் ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி டீனாக பணியாற்றி வந்த லலிதா தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீனாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று காலை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். கடந்த 27 ஆண்டுகளாக அரசு பணியில் உள்ளார். 1994-ம் ஆண்டு முதல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி உள்ளார். அதன்பிறகு கன்னியாகுமரி, தேனி அரசு மருத்துவக்கல்லூரிகளில் மயக்கவியல் துறை பேராசிரியராக பணியாற்றி உள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பதவி உயர்வு பெற்று வேலூர் மருத்துவக்கல்லூரி டீனாக பணியாற்றினார். தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி டீனாக நேற்று பொறுப்பேற்று உள்ளார்.இதுகுறித்து புதிய டீன் லலிதா கூறியதாவது:-

முதுகலை பாடப்பிரிவு

அரசு ஆஸ்பத்திரிகளில் பல்வேறு தரப்பு மக்களும் சிகிச்சைக்காக வருவார்கள். அவர்களிடம் அன்போடு பேசி, டாக்டர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை 150 இடங்களாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மருத்துவ கழக குழு விரைவில் தூத்துக்குடிக்கு வர உள்ளது. அதற்கான பணிகளை திறம்பட செய்து, 150 இடங்களை பெற நடவடிக்கை எடுக்கப்படும். அதே போன்று வரும் கல்வியாண்டில் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் குழந்தை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், பொது மருத்துவம் உள்ளிட்ட 4 பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டப்படிப்பு தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டு இந்த படிப்புகள் தொடங்க வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட இதய நோய்களுக்கான நவீன அறுவை சிகிச்சை வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்