குஜராத் அருகே நடந்த தனியார் எண்ணெய் கப்பல் தீ விபத்தில் தூத்துக்குடியை சேர்ந்த அதிகாரி சாவு

குஜராத் அருகே தனியார் எண்ணெய் கப்பலில் நடந்த தீ விபத்தில் தூத்துக்குடியை சேர்ந்த அதிகாரி பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-01-19 21:30 GMT
தூத்துக்குடி,

குஜராத் அருகே தனியார் எண்ணெய் கப்பலில் நடந்த தீ விபத்தில் தூத்துக்குடியை சேர்ந்த அதிகாரி பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடியை சேர்ந்த அதிகாரி சாவு

தூத்துக்குடி வடக்கு ராஜா தெருவை சேர்ந்தவர் மேன்லின் பர்னாந்து(வயது 36). இவருக்கு ரம்யா என்ற மனைவியும், 7 வயதில் ரியான் என்ற மகனும், 6 மாத ஆண் குழந்தையும் உள்ளது. மேன்லின் பர்னாந்து, கடந்த 4 மாதத்துக்கு முன்பு மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.டி.ஜெனிசா என்ற டேங்கர் கப்பலில் எலக்ட்ரிக்கல் பிரிவில் முதல் நிலை அதிகாரியாக பணியாற்றினார்.

இந்த கப்பல் கடந்த 17-ந் தேதி மாலையில் 30 ஆயிரம் டன் டீசலுடன் குஜராத் மாநிலம் காண்ட்லா துறைமுகத்துக்கு வந்தது. துறைமுகம் அருகே வந்தபோது கப்பல் என்ஜின் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் மேன்லின் பர்னாந்து உள்பட 2 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிசிச்சை பலனின்றி மேன்லின் பர்னாந்து பரிதாபமாக இறந்தார்.

உடல் இன்று வருகை


இதுகுறித்து மும்பை நிறுவனத்தின் தூத்துக்குடி முகவர்கள் மூலம் மேன்லின் பர்னாந்துவின் தந்தை எட்வின் பர்னாந்துக்கு நேற்று முன்தினம் காலையில் தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் மேன்லின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக மேன்லின் உறவினர்கள் குஜராத்துக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு இருந்து அவரது உடல் இன்று(சனிக்கிழமை) தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது.

இது குறித்து மேன்லின் உறவினர்கள் கூறும்போது, மேன்லின் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பணிக்காக கப்பலுக்கு சென்றார். அவருடைய பணிக்காலம் கடந்த 15-ந் தேதியுடன் முடிவடைந்தது. அன்று அவர் குஜராத் காண்ட்லா துறைமுகத்தில் இறங்கி ஊருக்கு வருவதாக இருந்தது. ஆனால் அவருக்கு மாற்று ஆள் வராததால் மேன்லின் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவர் தீவிபத்தில் சிக்கி உயிர் இழந்து உள்ளார் என்று கூறினர்.

மேலும் செய்திகள்