மொபட்டில் வந்த போது சாலை பள்ளத்தில் விழுந்து கல்லூரி மாணவி சாவு

புதுவையில் சாலையை செப்பனிடாததை கண்டித்து பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முன் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2018-01-18 23:36 GMT
புதுச்சேரி,

புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் பாக்குமுடையான்பட்டு முதல் சிவாஜி சிலை வரை பருவமழையின்போது கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆங்காங்கே ரோடுகளில் பெரிய அளவிலான பள்ளங்கள் உள்ளன.

இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் போதிய விளக்கு வெளிச்சம் இல்லாமல் விபத்தில் சிக்குகின்றனர். இந்தநிலையில் புதுவை லாஸ்பேட்டை நந்தா நகர் ஆதிமூலம் தெருவை சேர்ந்த ராஜமாணிக்கத்தின் மகளும் கல்லூரி மாணவியுமான சுபத்ரா (வயது 21) நேற்று முன்தினம் இரவு வி.ஐ.பி. நகரில் உள்ள கம்ப்யூட்டர் பயிற்சி மையத்துக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சாலையில் இருந்த பள்ளத்தில் மொபட் இறங்கியதால் நிலை தடுமாறி விழுந்துள்ளார். அந்த சமயத்தில் அவருக்கு பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் சுபத்ரா மீது ஏறி இறங்கியதாக கூறப் படுகிறது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுபத்ரா சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திடீர் போராட்டம்இந்த தகவலை அறிந்த தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான அசோக் ஆனந்து நேற்று பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்துக்கு வந்தார். தலைமை பொறியாளர் அறை அருகே திடீரென நடுவழியில் அமர்ந்து அவர் தர்ணாவில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்களும் அவருடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம் வந்து அசோக் ஆனந்து எம்.எல்.ஏ.வுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் அவரது சமரசத்தை ஏற்காமல் தொடர்ந்து அவர் தர்ணாவில் ஈடுபட்டார். மேலும் தொடர் உண்ணாவிரதப் போராட் டத்தை தொடங்கினார். இதனைத்தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் சமரசம் அடையாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தினார். இந்த போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது.

இது குறித்து அசோக் ஆனந்து எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:- புதுவையில் தொடர் மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பாக்குமுடையான்பட்டு மெயின்ரோடு, கொக்கு பார்க், ஜீவா காலனி சந்திப்பு, லாஸ்பேட்டை மெயின்ரோடு, வழுதாவூர் ரோடு, ராஜீவ்காந்தி சந்திப்பு, ராஜீவ்காந்தி சிலையில் இருந்து சிவாஜி சிலை வரை சாலையை செப்பனிட வேண்டும் என்று பொதுப் பணித்துறை தலைமை பொறியாளருக்கு கடந்த டிசம்பர் மாதம் 8-ந்தேதி கடிதம் கொடுத்தேன். ஆனால் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதன் காரணமாக இப்போது மாணவி ஒருவர் பலியாகி உள்ளார். இதற்கு யார் பொறுப்பேற்பது? இந்த சாலைகளை செப்பனிடும்வரை நான் இங்கிருந்து செல்லப்போவதில்லை. பொதுப் பணித்துறை மனது வைத்திருந்தால் 2 நாள் இரவுக்குள் சாலையை செப்பனிட்டிருக்கலாம். இதற்கான நிதியும் பொதுப்பணித்துறையில் உள்ளது. இவ்வாறு அசோக் ஆனந்து எம்.எல்.ஏ. கூறினார்.

இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் மனோகர் தலைமையில் சாலை செப் பனிடும் பணி நேற்று இரவு தொடங்கியது. இதில் சிவாஜி சிலை முதல் கொக்கு பார்க் வரை செப்பனிடும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்