இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை முன்னிட்டு மாணவர்களிடம் நற்பண்புகளை வளர்க்க நீச்சல் மூலம் விழிப்புணர்வு
இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை முன்னிட்டு மாணவர்களிடம் நற்பண்புகளை வளர்க்க நீச்சல் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சென்னை,
9-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி வருகிற 24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியையொட்டி பல்வேறு முன்னோட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
‘வருணா ஸ்விம்மத்தான்’ என்ற மாணவர்களிடம் நற்பண்புகளை வளர்க்க நீச்சல் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. நீச்சல் குளத்தில் நேற்று நடைபெற்றது. இதை தொழில் அதிபர்கள் கிரிஷ் மாத்ருபூதம், பிரகாஷ் சாலா, இந்து ஆன்மிக மற்றும் சேவை மைய அறங்காவலர் ராஜலட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
விழிப்புணர்வு
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவர்கள், இளைஞர்களின் நற்பண்புகளை வளர்க்க வனம் மற்றும் வனவிலங்குகளை பாதுகாப்பதை முன்னிறுத்தி பாம்பு வகை நீச்சல், ஜீவராசிகளை பேணுதல் என்ற பண்பை வலியுறுத்தி சுதந்திர நீச்சல், சுற்றுச்சூழலை பராமரித்தலை முன்வைத்து தண்ணீரில் மிதத்தல், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை வணங்குதலை முன்னிறுத்தி பக்கவாட்டு நீச்சல், பெண்மையை போற்றுதல் என்ற கருத்தை போற்றி பட்டாம்பூச்சி நீச்சல், நாட்டுப்பற்றை உணர்த்துதல் என்பதை காட்டும் விதமாக பின்புறமாக நீந்துதல் போன்றவைகளை செய்து காட்டினர்.