ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவதூறு வழக்கு ராகுல்காந்தி ஆஜராக ஏப்ரல் 23-ந்தேதி வரை அவகாசம்

ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவதூறு வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேரில் ஆஜராக ஏப்ரல் 23-ந்தேதி வரை தானே மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு அவகாசம் அளித்தது.

Update: 2018-01-17 22:00 GMT
தானே,

ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த அவதூறு வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேரில் ஆஜராக ஏப்ரல் 23-ந்தேதி வரை தானே மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு அவகாசம் அளித்தது.

ராகுல்காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் பாராளுமன்ற தேர்தலையொட்டி, மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பிவண்டி பகுதியில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, “மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தான்” என்று அவர் பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ராகுல்காந்தி மீது உள்ளூர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ராஜேஷ் குந்தே என்பவர், தானே மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை பரிசீலித்த மாஜிஸ்திரேட்டு எம்.எம்.பதான், அடுத்தகட்ட விசாரணையின் போது ராகுல்காந்தி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.

சிறப்பு சலுகை

அதன்படி, இந்த வழக்கு நேற்று மீண்டும் மாஜிஸ்திரேட்டு எம்.எம்.பதான் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல்காந்தி தரப்பில் ஆஜரான வக்கீல், “அரசியல் வேலைகள் காரணமாக ராகுல்காந்தியால் இன்றைக்கு ஆஜராக இயலவில்லை. அவர் நேரில் ஆஜராக கால அவகாசம் அளிக்கவேண்டும்” என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வக்கீல், “இது விசாரணையை தாமதப்படுத்தும் சூழ்ச்சி. ராகுல்காந்திக்கு அவகாசம் வேண்டும் என்றால் அதனை முன்கூட்டியே கோரி இருப்பார். இப்படி கடைசி நிமிடத்தில் அவகாசம் கேட்டிருக்க மாட்டார்” என்று வாதத்தை முன்வைத்தார்.

மேலும், இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு சிறப்பு சலுகை காட்டப்படுவதாக குற்றம்சாட்டி, குறிப்பாணை(மெமோ) ஒன்றையும் மாஜிஸ்திரேட்டிடம் தாக்கல் செய்தார்.

அவகாசம்

இதனை பெற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு, இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேரில் ஆஜராக ஏப்ரல் 23-ந்தேதி வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்