பட்டுநூல் விலையை குறைக்க மத்திய –மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கைத்தறி நெசவு தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

பட்டுநூல் விலையை குறைக்க மத்திய –மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கைத்தறி நெசவு தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

Update: 2018-01-17 21:45 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவு தொழிலாளர் சங்க நிர்வாகக்குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் சித்தையன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் சின்னசாமி ஆகியோர் பேசினார்கள். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

* நீண்ட காலமாக உயர்த்தப்படாமல் உள்ள நெசவாளர்களின் அடிப்படை கூலியை தற்போதைய வாழ்க்கை செலவினங்களுக்கு ஏற்ப உயர்த்த வேண்டும். 60 வயது நிறைவடைந்த அனைத்து கூட்டுறவு சங்க நெசவாளர்கள் மற்றும் தனியார் நெசவாளர்கள் அனைவருக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கவேண்டும்.

* அரசு வழங்க வேண்டிய தள்ளுபடி மானியத்தொகை ரூ.400 கோடியை உடனே வழங்கவேண்டும். மேலாண்மை இயக்குனர்களுக்கு கூட்டுறவு நெசவாளர்கள் சங்கங்களில் இருந்து ஊதியம் மற்றும் இதர சலுகைகளை வழங்குவதால் கூட்டுறவு நெசவாளர்கள் சங்கங்களுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு வருவதோடு, நெசவாளர்கள் நலனும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே மேலாண்மை இயக்குனர்களுக்கு அரசே ஊதியம் வழங்கவேண்டும்.

* வரி விலக்கு அளிக்கப்பட்டு இருந்த கைத்தறி ரகங்களுக்கு, தற்போது சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டு உள்ளதால் நெசவு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே கைத்தறி ரகங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

* கைத்தறி பட்டுநெசவுக்கு முக்கிய மூலப்பொருளான பட்டுநூல் விலை கடந்த 6 மாதத்தில் 25 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து ஒரு கிலோ ரூ.1,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கைத்தறி நெசவாளர்களுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. எனவே பட்டுநூல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்