தூத்துக்குடியில் பிளம்பர் வெட்டிக்கொலை தனது சகோதரியை கொன்றதற்கு பழி தீர்த்த அண்ணன் உள்பட 3 பேர் கைது

தூத்துக்குடியில் பிளம்பர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தனது சகோதரியை கொன்றதற்கு பழி தீர்த்த அண்ணன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-01-17 21:15 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில் பிளம்பர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தனது சகோதரியை கொன்றதற்கு பழி தீர்த்த அண்ணன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

உருட்டுக்கட்டையால் அடித்து பெண் கொலை


தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் மாயாண்டி(வயது 39). இவருடைய மனைவி செண்பகவள்ளி(36). இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த பிளம்பர் அம்பிகாவதிக்கும்(40) முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் செண்பகவள்ளி, வீட்டின் முன்பு வாசலில் கோலம் போட்டுக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த அம்பிகாவதி, உருட்டுக்கட்டையால் செண்பகவள்ளியை அடித்துக் கொலை செய்தார். இதுதொடர்பாக வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து அம்பிகாவதியை கைது செய்தனர்.

பழிக்குப்பழி தீர்க்க திட்டம்

இந்த வழக்கில் சிறையில் இருந்த அம்பிகாவதி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியில் வந்தார். பின்னர் அவர் முத்துகிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

தனது தங்கையை அடித்துக்கொன்றதால் அம்பிகாவதி மீது மிகுந்த ஆத்திரம் அடைந்த செண்பகவள்ளியின் அண்ணனும், நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்தவருமான செந்தில்குமார்(39), தனது உறவினர்கள் பாளையங்கோட்டையை சேர்ந்த பிச்சையா(51), இசக்கிமுத்து(30) ஆகியோருடன் சேர்ந்து அம்பிகாவதியை பழிக்கு பழி தீர்க்க முடிவு செய்தார்.

வெட்டிக் கொலை

நேற்று முன்தினம் தை அமாவாசையையொட்டி செந்தில்குமார், பிச்சையா, இசக்கிமுத்து ஆகிய 3 பேரும் ராமேசுவரத்துக்கு சென்றனர். அங்கு செந்தில்குமார் தனது தங்கை செண்பகவள்ளிக்கு தர்ப்பணம் கொடுத்தார். அங்கிருந்து 3 பேரும் நேராக தூத்துக்குடிக்கு வந்தனர். நேற்று அதிகாலையில் அம்பிகாவதி வீட்டின் அருகே நின்று கொண்டு நைசாக வேவு பார்த்து உள்ளனர். காலை 6.30 மணி அளவில் அம்பிகாவதி வீட்டின் அருகே உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டு இருந்துள்ளார்.

இதனை பார்த்த 3 பேரும் அங்கு சென்றனர். பின்னர் அவர்கள் தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் அம்பிகாவதியை சரமாரியாக வெட்டினர். அவர்களிடம் இருந்து அம்பிகாவதி உயிர் தப்பி ஓடினார். ஆனாலும் 3 பேரும் அவரை விடாமல் தொடர்ந்து விரட்டிச் சென்றனர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய அம்பிகாவதி தனது வீட்டுக்குள் புகுந்தார். அவரை தொடர்ந்து விரட்டிச் சென்ற செந்தில்குமார் உள்பட 3 பேரும் வீட்டுக்குள் புகுந்து அம்பிகாவதியை மேலும் சரமாரியாக வெட்டினர். இதில் அம்பிகாவதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

அரிவாளுடன் சரண் அடைந்தனர்

பின்னர் அவர்கள் 3 பேரும் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் நிலையத்திற்கு அரிவாளுடன் சென்று சரண் அடைந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று கொலை செய்யப்பட்ட அம்பிகாவதி உடலை மீட்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் செந்தில்குமார், பிச்சையா, இசக்கிமுத்து ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தனது தங்கையை கொலை செய்ததற்கு பழிக்கு பழியாக தனது உறவினர்களுடன் சேர்ந்து அம்பிகாவதியை கொலை செய்ததாக செந்தில்குமார் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்