இருவேறு விபத்துகளில் 4 பேர் பலி

இருவேறு விபத்துகளில் 4 பேர் பலியானார்கள்.

Update: 2018-01-16 23:05 GMT
வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள வஞ்சுவாஞ்சேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 20). இவர் நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன், தினேஷ், தினகரன், பள்ளு, உள்பட 5 பேரை காரில் ஏற்றிக்கொண்டு வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். கரசங்கால் அருகே செல்லும் போது திடீரென காரின் முன்பக்கம் உள்ள 2 டயர்களும் வெடித்தன. இதில் தாறுமாறாக ஒடிய கார் உருண்டு தலைகுப்புற கவிழ்ந்தது. கார் டிரைவர் சவுந்தர்ராஜன், காரில் இருந்த சீனிவாசன், தினேஷ், தினகரன், பள்ளு உள்பட 6 பேரும் காயம் அடைந்தனர்.

அந்த கார் சாலை ஓரமாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்த கரசங்கால் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த கமலா(65) மீதும் மோதியது. இதில் காயம் அடைந்த 7 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆடு மேய்த்துக்கொண்டிருந்த கமலா, கார் டிரைவர் சவுந்தர்ராஜன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கத்தை அடுத்த பெருங்கரணை கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன்(40). விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூரை சேர்ந்தவர் தெய்வகண்ணு(55). இவர்கள் இருவரும் பெருங்கரணையில் இருந்து மேலமருவத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அச்சரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலை பெருங்கரணை வளைவு அருகே சென்றபோது பின்னால் வந்த கார் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் வீரப்பன், தெய்வகண்ணு இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இது குறித்து அச்சரப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்