சேத்தியாத்தோப்பு அருகே கார் மீது டேங்கர் லாரி மோதல்; டிரைவர் பலி

சேத்தியாத்தோப்பு அருகே கார் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-01-16 22:19 GMT
சேத்தியாத்தோப்பு,

சிதம்பரம் விளங்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 50). இவர் அரசு போக்குவரத்து கழக டிக்கெட் பரிசோதகர்கள் செல்லும் காரின் டிரைவராக உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல சிதம்பரத்தில் இருந்து 4 டிக்கெட் பரிசோதகர்களுடன் டிரைவர் குமார் ஒரத்தூர் பஸ் நிறுத்தத்திற்கு சென்றார். பின்னர், பரிசோதகர்கள் 4 பேரும் அவ்வழியாக வந்த அரசு பஸ்சில் ஏறி, டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டே சிதம்பரம் நோக்கி சென்றனர்.

இதையடுத்து, குமார் காரை சிதம்பரம் நோக்கி ஓட்டிச் சென்றார். ஆயிப்பேட்டை அருகே சென்ற போது, எதிரே வந்த டேங்கர் லாரி ஒன்று, குமார் ஓட்டிச் சென்ற கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய குமார், பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த சேத்தியாத்தோப்பு போலீசார் பலியான குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்