நம்பியூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை

நம்பியூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-16 22:00 GMT
நம்பியூர்,

நம்பியூர் தாலுகாவுக்கு உள்பட்ட மலையபாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இந்த கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். நேற்று முன்தினம் மாலையில் டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்திவிட்டு ஒருவர் வெளியே வந்தார்.

அவர் குடிபோதையில் நடந்து சென்றதால் அந்த பகுதியில் நின்றிருந்த விஜயலட்சுமி என்பவர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் கீழே விழுந்த விஜயலட்சுமிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த நிலையில் டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கோரி நேற்று பகல் 11.30 மணி அளவில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் டாஸ்மாக் கடையின் முன்பு அமர்ந்துகொண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கடையை நிரந்தரமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள். பகல் 12 மணி அளவில் டாஸ்மாக் கடையை திறக்கவும் பெண்கள் அனுமதிக்கவில்லை.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நம்பியூர் தாசில்தார் ராணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பெண்கள் கூறும்போது, “மலையபாளையம் பஸ் நிறுத்தத்திற்கு அருகிலேயே டாஸ்மாக் கடை இருப்பதால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. ஏராளமானவர்கள் மது அருந்திவிட்டு பிரச்சினை செய்கிறார்கள். பெண்கள் சாலையில் நடந்து செல்வதற்கே அச்சமாக உள்ளது. பெண்களிடம் குடிமகன்கள் தகராறு செய்கிறார்கள். இதனால் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மேலும், டாஸ்மாக் கடைக்கு அருகில் வீடுகள் அதிகமாக உள்ளன. இதனால் குடிமகன்கள் வீட்டிற்கு அருகில் வந்து மது அருந்துகிறார்கள். மேலும், வீட்டு வாசலிலேயே குடிபோதையில் படுத்து தூங்கிவிடுகிறார்கள். எனவே டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றனர்.

அதற்கு அதிகாரிகள், டாஸ்மாக் நிறுவன உயர் அதிகரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர். ஆனால், கடையை மூடும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று பெண்கள் உறுதியாக இருந்தனர். அதன்பின்னர் மலையபாளையத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்றும், வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்