கோவா மந்திரியை கண்டித்து இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் பெங்களூருவில் நடந்தது

கோவா மந்திரியை கண்டித்து இளைஞர் காங்கிரசார் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-01-16 21:00 GMT
பெங்களூரு,

கோவா மந்திரியை கண்டித்து இளைஞர் காங்கிரசார் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்


மகதாயி நதிநீர் பிரச்சினையில் கோவா மாநில நீர்ப்பாசனத்துறை மந்திரி வினோத் பாலேகர் கன்னடர்கள் பற்றி தவறான கருத்தை கூறினார். இதற்கு கர்நாடக அரசியல் கட்சிகள் மற்றும் கன்னட அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் கோவா மந்திரியை கண்டித்து பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது கன்னடர்கள் பற்றி தவறான கருத்தை தெரிவித்த கோவா மந்திரியை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர். அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

ஒத்துழைப்பு வழங்கவில்லை

இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி மனோகர் கூறியதாவது:-

“குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி வடகர்நாடக விவசாயிகள் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக தீவிர போராட்டம் நடத்தி வருகிறார்கள். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்த்து கொள்ளுங்கள் என்று நடுவர் மன்றம் கூறி இருக்கிறது. ஆயினும் கோவா அரசு இதற்கு ஒத்துழைப்பு வழங்க வில்லை. ஆனால் கர்நாடக எல்லைக்குள் வந்து கோவா மந்திரி பணிகளை ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளார்.

மேலும் கன்னடர்களை பற்றி தவறாக பேசி இருக்கிறார். இதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த விஷயத்தில் கோவா முதல்-மந்திரி மற்றும் கர்நாடக பா.ஜனதாவினர் அமைதி காக்கிறார்கள். பிரதமர் மோடி இதில் தலையிட்டு உடனடியாக பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்“.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்