திருச்சி அருகே பட்டதாரி பெண் மர்ம சாவு உதவி கலெக்டர் விசாரணை

திருச்சி அருகே சோழன் நகரில் பட்டதாரி பெண் மர்மமான முறையில் இறந்தார். இதுபற்றி உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் உதவி கலெக்டர் விசாரணை நடத்தினார்.

Update: 2018-01-16 23:00 GMT
சோமரசம்பேட்டை,

திருச்சி அருகே உள்ள சோழன் நகரை சேர்ந்தவர் வடிவேலு (வயது28). இவருக்கும் நொச்சியம் அருகே உள்ள நெற்குப்பை என்ற கிராமத்தை சேர்ந்த கீர்த்திகாவுக்கும்(24) 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கீர்த்திகா பி.காம். பட்டதாரி. சென்னையில் உள்ள ஒரு ரத்த வங்கியில் வேலை செய்து வந்த வடிவேலு தற்போது வேலை எதுவும் இல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை.


கீர்த்திகா பொங்கல் பண்டிகையையொட்டி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். பொங்கல் தினத்தன்று தாய் வீட்டில் இருந்து புறப்பட்டு தனது கணவர் வீட்டுக்கு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வடிவேலு, கீர்த்திகா வீட்டில் தூக்கு போட்டுக் கொண்டதாக தனது மாமனார் வீட்டுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். உடனே அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோழன்நகருக்கு சென்றபோது கீர்த்திகா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்து விட்டதாக கூறி இருக்கிறார்கள்.

இதுபற்றி கீர்த்திகாவின் சித்தி உமாபதி, ராம்ஜிநகர் போலீசில் புகார் செய்தார். அதில், கீர்த்திகாவை அவரது கணவர் குடும்பத்தினர் அடிக்கடி மிரட்டி இருக்கிறார்கள். பொங்கல் தினத்தன்று எங்களிடம் நல்லபடியாக பேசிவிட்டு சென்ற கீர்த்திகா திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை. கீர்த்திகா சாவில் மர்மம் இருப்பதால் இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.


ராம்ஜிநகர் போலீசார் கீர்த்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கீர்த்திகா திருமணமாகி 2 வருடத்திற்குள் இறந்து இருப்பதால் வரதட்சணை கொடுமை காரணமாக இருக்குமா? அல்லது அவர் ஏதாவது பிரச்சினை காரணமாக அடித்து கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என்ற கோணங்களில் திருச்சி உதவி கலெக்டர் கமல்கிஷோர் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்