தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் ரூ.95 லட்சம் சிக்கியது: வருமானவரி அதிகாரிகள் ஆய்வு

தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் ரூ.95 லட்சம் சிக்கியது தொடர்பாக வங்கி கணக்குகள் குறித்து வருமானவரி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Update: 2018-01-13 23:01 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மாடியில் மண்டல போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த 11-ந் தேதி மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சை மண்டல போக்குவரத்து அலவலகத்திற்குட்பட்ட தஞ்சை, கும்பகோணம், திருவாரூர், நாகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பொங்கல் பண்டிகை மாமூலாக கணிசமான தொகை மண்டல போக்குவரத்து துணை ஆணையருக்கு வழங்கப்பட இருப்பதாக வந்த தகவலின்பேரில் தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசாரும், மாவட்ட ஆய்வுக்குழு அதிகாரிகளும் மண்டல போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

ரூ.2 லட்சத்து 77 ஆயிரம்

அப்போது அவர்கள், அலுவலர்களுடன் நின்ற பிள்ளையார்பட்டியில் தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வரும் சங்கிலிமுத்துவை அழைத்து விசாரணை நடத்தினர். அதில் அவர், பொங்கல் பண்டிகைக்காக மாமூலாக வட்டார போக்குவரத்து அலுவலர்களால் வழங்கப்பட்ட ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்தை பெற்று போக்குவரத்து துணை ஆணையருக்கு வழங்க வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து, அவருக்கு சொந்தமான தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

வருமானவரி அதிகாரிகள் ஆய்வு

அப்போது அங்கிருந்த 3 பேர் 2 பைகளில் கட்டுக்கட்டாக பணம் வைத்து இருந்தது கண்டறியப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.95 லட்சம் கைப்பற்றப்பட்டது. இந்த பணம் குறித்து விசாரித்தபோது நிலம் வாங்குவதற்கு வைத்து இருந்ததாக தெரிவித்தனர். முறையாக இந்த தொகைக்கு வருமான வரி செலுத்தப்பட்டு இருக்கிறதா? என்று விசாரிப்பதற்காக திருச்சி வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்தனர். உடனே 3 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் குழுவினர் தஞ்சைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் முறையான ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சமர்ப்பித்து அவர்களிடம் இருந்து ரூ.95 லட்சத்தை பெற்று கொண்டனர். பின்னர் பணம் வைத்து இருந்த 3 பேரை தனியாக அழைத்து சென்று அவர்களிடம் தீவிர விசாரணையை வருமானவரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

ஆய்வு

அப்போது திருச்சி மற்றும் புதுக்கோட்டை பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கி என 4 வங்கிகளில் இருந்து பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. அந்த பணம் யாருடைய வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது? அந்த வங்கி கணக்கிற்கு எங்கிருந்து பணம் போடப்பட்டுள்ளது? எதற் காக பணத்தை போட்டார்கள், உண்மையிலேயே நிலம் வாங்குவதற்காக தானா? அல்லது வேறு காரணத்திற்காகவா? என வங்கி கணக்குகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.மேலும் தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர் சங்கிலிமுத்து மற்றும் மண்டல போக்குவரத்து துணை ஆணையர் சிவக்குமார் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறும்போது, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் துணை ஆணையர் சிவக்குமார் இடமாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.95 லட்சத்தை வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டோம். அவர்கள் அந்த பணம் யாருடைய வங்கி கணக்குகளில் இருந்து எடுக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்றனர். 

மேலும் செய்திகள்