வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி: மதுரை கலெக்டர் அலுவலக உதவியாளர் கைது

மதுரை மேலூர் தாலுகாவை சேர்ந்த செல்வம் மனைவி தீபிகா.

Update: 2018-01-13 22:19 GMT
மதுரை,

மதுரை மேலூர் தாலுகாவை சேர்ந்த செல்வம் மனைவி தீபிகா (வயது 29). இவர் அங்கன்வாடி பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்து இருந்தார். அப்போது மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்க்கும் செந்தில் என்ற முத்துவீரன் என்பவர் தீபிகாவிற்கு அறிமுகம் ஆனார். அவரிடம் ரூ.2 லட்சம் கொடுத்தால் உடனே வேலை வாங்கி கொடுப்பதாக தெரிவித்தார். அதை நம்பி தீபிகா 1 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை செந்திலிடம் கொடுத்தார். பின்னர் அவர் சில நாட்கள் கழித்து பணி நியமனத்திற்கான உத்தரவு நகலை கொடுத்தார். அதனை வாங்கி கொண்டு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலக அதிகாரியிடம் தீபிகா காண்பித்தார். அப்போது அதிகாரி அங்கன்வாடி பணியாளர் வேலைக்கான உத்தரவு வழங்கப்படவில்லை என்று அவரிடம் தெரிவித்தார். அதை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தீபிகா மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

 அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்க்கும் செந்தில் என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்