மேல்நிலை தொட்டி நிரம்பி வீணாக வயல்வெளிக்கு பாயும் குடிநீர்

ஊத்துக்கோட்டை அருகே மின் மோட்டாரை நிறுத்த முடியாததால் மேல்நிலை குடிநீர் தொட்டி நிரம்பி தண்ணீர் முழுவதும் வீணாக வயல்வெளிக்கு பாய்ந்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2018-01-12 23:52 GMT

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரிட்டிவாக்கம் ஊராட்சியில் சுமார் ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட உப்பரபாளையம், வடதில்லை ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு அருகே உள்ள ஆரணி ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து பேரிட்டிவாக்கம், உப்பரபாளையம் பகுதிகளில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு ஏற்றப்பட்டு பின்னர் குழாய்கள் மூலம் வினியோகிக்கப்படுகிறது.

அதேபோல் வடதில்லை கிராம மக்களுக்கு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 மேல் நிலை குடிநீர் தொட்டிகளுக்கு அனுப்பட்டு குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 6 மாத காலமாக வடதில்லை மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு நீர் அனுப்பும் மின் மோட்டார் பொத்தான் சரிவர வேலை செய்யாததால் (பொத்தானை அழுத்த முடியாததால்) மின்மோட்டாரை நிறுத்த முடியவில்லை.

இதனால் குடிநீர் தொட்டிக்கு 24 மணி நேரமும் தண்ணீர் வினியோகம் ஆகிறது. தொட்டி முழுவதுமாக நிரம்பி தண்ணீர் வீணாக வழிந்தோடிக்கொண்டிருக்கிறது. பொதுமக்கள் குடிக்க வேண்டிய இந்த தண்ணீர் அருகே உள்ள வயல்வெளிக்கு பாய்ந்து வருகிறது

இது குறித்து ஒன்றிய அலுவலகத்தில் புகார் செய்தால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று வடதில்லை கிராம மக்கள் தெரிவித்தனர். இப்படி 24 மணி நேரமும் மின் மோட்டார் இயங்கி கொண்டிருப்பதால் மின்கட்டணம் அதிக அளவில் செலுத்த வேண்டி உள்ளது.

தண்ணீர் வீணாவதுடன், மின்கட்டணமும் அதிக அளவில் செலுத்துகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரும் வீணாக வயல் வெளிக்கு சென்று கொண்டிருப்பது வேதனைக்குரிய வி‌ஷயமாகும்.

மாவட்டத்தில் உள்ள பல பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் குடங்களுடன் வெகுழீ{ரம் நடந்து சென்று வயல்வெளிகளில் உள்ள கிணறுகளில் இருந்து குடிநீர் சுமந்து வரும் நிலை இருக்கும் சூழ்நிலையில் இப்படி குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


மேலும் செய்திகள்