பொங்கல் பண்டிகையையொட்டி கிளாம்பாக்கத்தில் தற்காலிக பஸ் நிலையம்

பொங்கல் பண்டிகையையொட்டி கிளாம்பாக்கத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2018-01-12 23:37 GMT

வண்டலூர்,

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் உள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று பொங்கல் விழாவை கொண்டாடுவதற்காக கோயம்பேடு பஸ் நிலையம், தாம்பரம் அண்ணா பஸ்நிலையம் உள்பட பல இடங்களில் இருந்து அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது.

இந்த பஸ்கள் அனைத்தும் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் உள்ள சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் நின்று செல்லும்.

இதற்காக தற்காலிக பஸ் நிலையத்தில் பயணிகள் அமருவதற்கு பந்தல், நாற்காலிகள், போடப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வசதி, மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 300 போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏறி பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்