மின்னணு வழிச்சீட்டு இல்லாமல் பொருட்கள் கொண்டு சென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம்

மின்னணு வழிச்சீட்டு இல்லாமல், ரூ.50 ஆயிரம் மதிப்புக்கு மேற்பட்ட பொருட்களை வாகனங்களில் கொண்டு சென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று வணிக வரித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2018-01-12 23:28 GMT

திண்டுக்கல்,

நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சட்டத்தின் கீழ், சரக்குகளை வாகனங்களில் கொண்டு செல்வதை முறைப்படுத்த மின்னணு வழிச்சீட்டு முறை அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வணிகர்கள், கணக்காளர்கள், வாகன உரிமையாளர்களுக்கான பயிலரங்கம் திண்டுக்கல் பிச்சாண்டி மகாலில் நடந்தது. வணிக வரித்துறை சார்பில் நடந்த இந்த பயிலரங்கத்துக்கு, துணை ஆணையர் மகேஸ்வரி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

ரூ.50 ஆயிரம் மதிப்புக்கு மேற்பட்ட பொருட்களை வாகனங்களில் கொண்டு செல்வதற்கு மின்னணு வழிச்சீட்டு வைத்திருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த மின்னணு வழிச்சீட்டை ஆன்லைன் மூலமாக செல்போன், கம்ப்யூட்டரில் உடனுக்குடன் உருவாக்கலாம். இதற்கு, http;// ewaybill.nic.in என்ற இணையதளத்தில் சென்று தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.

இதன்மூலம், பொருட்களை அனுப்புவோர், வாங்குபவர், லாரிகளில் கொண்டு செல்வோர் அனைவரும் மின்னணு வழிச்சீட்டை பெற்று, சோதனை நடத்தும் அதிகாரிகளிடம் காட்டலாம். இந்த சட்டம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 2–ந்தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. மின்னணு வழிச்சீட்டு இல்லாமல் சரக்குகளை கொண்டு செல்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகளின் அடிப்படையில் அபராத தொகை அதிகரிக்கப்படும். இதில், காய்கறிகள் உள்பட 154 பொருட்கள் கொண்டு செல்வதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களின் விவரங்களை அரசிதழில் காணலாம். மேலும் விவரங்களுக்கு வணிக வரித்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்